நாம் தமிழர் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி விளங்கி வருகிறது. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு மற்றும் அவரது நடவடிக்கை பிடிக்கவில்லை என கூறி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கடந்த சில நாட்களாக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகினார்.
நாதகவில் இருந்து விலகிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீச பாண்டியன், “நாம் தமிழர் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. ரஜினியை சந்தித்த பிறகு சீமானுக்கு மனமாற்றம் ஏற்பட்டது. குருமூர்த்தி, கோபால்ஜியை சீமான் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார். இருவரின் வழிகாட்டுதலின்பேரிலேயே பெரியார் குறித்து சீமான் பேசுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் இந்த மண்ணில் மலரக் கூடாது என சீமான் செயல்படுகிறார். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தோமோ அதிலிருந்து சீமான் விலகி செல்கிறார்” என்றார்.