சென்னையில் உள்ள விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் பதிவு செய்யும் குற்ற வழக்குகளில், புலன்விசாரணை முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இன்று மாலை 4.30 மணிக்குள் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் படி இந்த வழக்கு இன்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜரானார். அப்போது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலாளரிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.
அனைத்து மக்களாலும் நீதிமன்றத்திற்கு வரமுடியாது என்பதால், பொதுமக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் உள்துறை செயலாளரை வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கம் அல்ல, காவல்துறையில் நடப்பதை தெரியப்படுத்துவதற்காகத்தான் ஆஜராக உத்தரவிட்டதாகவும், இதுபோன்ற சிக்கல்கள் காவல்துறையில் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும் தெரிவித்தார்.