நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி ராம் நகர் பகுதியில் வசிப்பவர் கோமதி (45). இவர் கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிகிறார். கடந்த 20 ஆம் தேதி ராசிபுரம் காவல் நிலையத்தில், “எனது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 18 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்” என்று புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்ற பின்னர், ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த வீட்டின் அருகே மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் செல்வதை அறிந்த போலீசார், பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் போலீசாரைக் கண்டதும் அதிவேகமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த இருவர் கை, கால்கள் உடைந்து தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த டேவிட் (எ) சுந்தர்ராஜ் (24) மற்றும் மணி (22) என்பது தெரியவந்தது. வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகியோரும் மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், சேலம், ராசிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் நகை, பணம் மற்றும் இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது 20.01.25 முதல் 23.01.25 வரை பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.