ஈரோடு அருகே, மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபடும் தந்தையால் மன உளைச்சலுக்கு ஆளான 10-ம் வகுப்பு மாணவி, பள்ளி சீருடையில் கால்வாயில் குதி்த்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள பாதரை கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் 15 வயது தாரணி ஸ்ரீ. திருச்செங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளியில் 10.ம் வகுப்பு பயின்று வந்தார். மது பழக்கத்திற்கு ஆளான சேகர், மது போதையில் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது். இதே நிலை நீடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என தாரணி எச்சரித்து வந்துள்ளார். ஆனாலும் தந்தையின் மதுபழக்கம் குறையாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான தாரணி, நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் காணாமல் போனார்.
இது குறித்து அவரது பெற்றோர் திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு அருகே அக்ரஹாரம் பகுதியில் காலிங்கராயன் கால்வாயில் தாரணி ஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார். மாணவி கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்திற்கு வந்த மாணவி, அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் புத்தக பையை வைத்து விட்டு அருகில் இருந்த காலிங்கராயன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துள்ளார். மாணவி இறப்பதற்கு முன் எழுதி வைத்த 3 பக்க கடிதத்தை போலீசார் புத்தக பையில் இருந்து கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.