கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ்.கடந்த 7-ம் தேதி இங்கு ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து 5 நாட்களாக வேகமாக பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களாக போதிய மழை பொழிவு இல்லாததால் வறண்டு காணப்பட்ட இப்பகுதியில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று வீசியதன் காரணமாக காட்டுத் தீயாக மாறி வேகமாக பரவியது. இதனால், லட்சக்கணக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெளியேற வேண்டிய கட்டாயத்தில் மேலும் பல லட்சம் மக்கள் உள்ளனர்.
காட்டுத் தீ பரவுவதைப் பொறுத்து பகுதி பகுதியாக வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 91 வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளியேற தயாராக இருக்குமாறு 64 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் 1,44,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நகரம் முழுவதிலும் 6 பகுதிகள் தீ விபத்துகளால் எரிந்து வருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், தங்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், மாணவர்கள் வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை ஒட்டிய ஒரு பகுதிக்கு அரசு வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
கலிபோர்னியாவின் மாலிபு கடல்முனை பகுதியில் 13,000 ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றியுள்ள 6 காட்டுத் தீ விபத்துகள் கிட்டத்தட்ட 38,000 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் தவிக்கின்றனர்.
இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.