இந்தியாவின் ஏஐ தொழில்நுட்ப திட்டம்.. ஓபன் ஏஐ சி.இ.ஓவை சந்திக்கும் பிரதமர் மோடி..!
WEBDUNIA TAMIL February 06, 2025 08:48 PM


சாட் ஜிபிடி, டீப் சீக் போல இந்தியாவுக்கு என்ன தனி ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஓபன் ஏஐ, சி.இ.ஓவை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபன்ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் என்பவர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் டெல்லி வந்தார். அவரை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த தகவலை அஸ்வின் தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தியாவுக்கு என ஒரு முழு ஏ.ஐ. ஸ்டேக்கை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் குறித்து சாம் ஆல்ட்மேனுடன் ஆலோசனை நடத்தினேன். ஏஐ செயலி உருவாக்குவது தொடர்பாக தன்னுடைய ஒத்துழைப்பை அவர் இந்தியாவுக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார் என தெரிவித்தார்.

இது குறித்து சாம் ஆல்ட்மேன் கூறிய போது, "செயற்கை நுண்ணறிவு சந்தையில் இந்தியா ஒரு முக்கிய நாடாகும். எங்கள் இரண்டாவது பெரிய சந்தை இந்தியா தான். இந்தியா சிப்கள், மாடல் மற்றும் செயலிகள் வரை அனைத்தையும் உருவாக்கி வருகிறது," என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று சாம் ஆல்ட்மேன், பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும், இந்தியாவுக்கு என தனி ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்குவது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.