நீண்ட காலமாகவே அனைவரின் காத்திருப்பிலும் இருந்த 'விடாமுயற்சி' படம் ஒரு வழியாக இன்று திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் 'விடாமுயற்சி' குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் தியேட்டரில் விடாமுயற்சி படத்தை பார்த்து வருகின்றனர். அத்துடன் இயக்குனர் மகிழ் திருமேனி, திரிஷா, ரெஜினா, ஆரவ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட 'விடாமுயற்சி' படக்குழுவினரும் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தனர்.
இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தை பார்த்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'விடாமுயற்சி படத்தின் பாணிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமை. ஆனால் படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும் தான். படக்குழுவுக்கு பாராட்டுக்கள். சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்'. இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு கடைசியாக விஜய் நடிப்பில் 'கோட்' படத்தினை இயக்கியிருந்தார். மேலும், மங்காத்தவை போல் மீண்டும் அஜித்தை வைத்து இன்னொரு படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையில் 'விடாமுயற்சி' படத்திற்கு சோஷியல் மீடியாவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.