சமீப காலங்களாக நாடு முழுவதுமே குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக இளைஞர்கள் குற்ற செயல்களில் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் நடுரோட்டில் பைக்கில் சென்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருக்கும் பட்டாக்கத்தி, வீச்சருவா போன்ற பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுத்தப்படியே பைக்கில் பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பைக்குகளில் ஆபத்தான சாகசங்களைச் செய்து, ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்ததாக 5 இளைஞர்களை பெங்களூரு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து பெங்களூரு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நயீம், அராபத், சாஹில், நஞ்சமத் மற்றும் அட்னான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் கும்பல் வாள்களை ஏந்தி பொறுப்பற்ற பைக் சாகசங்களில் ஈடுபடுவதைப் படம்பிடித்த ஒரு வைரல் வீடியோவைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் நடந்திருப்பதாக தெரிகிறது. அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு வாகன ஓட்டி இந்த வீடியோவைத் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல்துறை சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வராவை பாஜக விமர்சித்துள்ளது. அதன்படி ஒரு பதிவில் "அன்புள்ள விபத்து உள்துறை அமைச்சர் @DrParameshwara, இந்த முறை என்ன சாக்குப்போக்கு? அவர்களை மனநிலை சரியில்லாதவர்கள் என்று சொல்லுங்கள்? அல்லது அவர்கள் வாள்களை எடுத்து பதிவு செய்தது வெறும் விபத்தா?"
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "மொஹப்பத் கி டுகான்" (அன்பின் கடை) பிரச்சாரத்தை கிண்டலாக குறிப்பிட்டு பாஜக மேலும் விமர்சித்தது. "இந்த 'மொஹப்பத் கி டுகான்'-ஐ எங்களுக்கு பரிசளித்த பாலக் புத்தி @ராகுல்காந்திக்கு சிறப்பு நன்றி - இங்கு திருப்திப்படுத்துவது மட்டுமே கையிருப்பில் உள்ளது! இது தொடர்ந்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்!" என பதிவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வாள்களை ஏந்தியபடி சமூக ஊடகங்களுக்காக ரீல்ஸ்களைப் பதிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்ற மற்றொரு சம்பவத்தில், பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் போக்குவரத்து நெரிசலின் நடுவே கார் ஓட்டுநர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிகழ்வும் வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.