Dhoni: "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதைக் கூற முடியாது..." - தோனி கூறுவதென்ன?
Vikatan February 22, 2025 10:48 PM

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், பெங்களூரும் மோதுகின்றன. சென்னை அணி தனது முதல் இரு போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது.

மறுபக்கம், தன்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டி சென்னையில்தான் என்று முன்பே கூறிவிட்டதால், கடந்த நான்காண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் திடீரென ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்ற சஸ்பென்ஸ்க்கு மத்தியில் ரசிகர்கள், தோனி விளையாடும் ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டியிலும் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

தோனி

கடந்த இரு சீசன்களாக முழங்கால் மூட்டு வலியுடன் விளையாடி வரும் தோனி, இன்னும் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஐ.பி.எல் விளையாட விரும்புவதாகக் கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மும்பையில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, ஐ.பி.எல்லில் விளையாடுவது குறித்துப் பேசியிருக்கிறார்.

அதில், ``வருடத்துக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறேன். அதை, அனுபவித்து மகிழ்வாக விளையாட விரும்புகிறேன். அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது. ஆனால், அதற்காக 6 முதல் 8 மாதங்கள் நான் கடினமாக உழைக்க வேண்டும். ஏனெனில், ஐ.பி.எல் மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்று. இங்கு யாரும் உங்களின் வயதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எத்தகைய போட்டியில் விளையாடுகிறீர்களோ, அத்தகைய நிலையில் நீங்கள் இருக்க வேண்டும்." என்று கூறினார்.

தோனி

மேலும், தொடர்ந்து பேசிய தோனி, ``நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே ஒரே எண்ணமாக இருந்தது. எப்போதும் முதலில் எனக்கு நாடுதான். ஏனெனில், கிரிக்கெட்டுக்கு அறியப்படும் மாநிலத்திலிருந்து நான் வரவில்லை. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய அணிக்குப் பங்களிக்க விரும்பினேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெற முயற்சிக்கும் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால் இனி அதை என்னால் கூற முடியாது. அதனால், இப்போது என்னுடைய காதல் எல்லாம் விளையாட்டின் மீதுதான்." என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.