கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் கலெக்டர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றமும், விநாயகர் கோயிலும் உள்ளன. இங்குத் தினமும் ஏராளமான மக்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலைப் பராமரித்து வரும் கோமதிபுரத்தைச் சேர்ந்த ராஜ்மோகனும் அவரது மனைவியும் நேற்று காலை கோயிலைத் திறக்க வந்தபோது, கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், கோயில் கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததையும், கோவிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடைபெற்ற கோயிலிலிருந்த சிசிடிவி-க்களை உடைத்தவர்கள், உடைத்த கேமிராக்களின் பகுதிகளைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசி சென்றுள்ளதும், அதே பகுதியில் ஹெல்மெட் ஒன்றை விட்டுச்சென்றதும் தெரிய வந்துள்ளது.
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோயில்இக்கோயிலில் மட்டுமின்றி அருகில் இருக்கக்கூடிய விநாயகர் கோயிலிலும் திருட முயற்சி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டரின் முகாம் அலுவலகம், காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலகங்கள், காவல்துறையினரின் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் கோயிலில் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!