தேசிய நெடுஞ்சாலை ஆணையம் FASTag பணப்பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 17 முதல் அமுலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் கடந்த 10 நிமிடங்களுக்குள் FASTag ல் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் செயலற்ற FASTag காரணமாக தாமதமான பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய ஒழுங்கு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்கள் தாமதமான பரிவர்த்தனைகளால் துன்புறுத்தப்படாமல் இருக்க சுங்கச்சாவடிகளை கடக்கும் நியமனமான நேரத்திற்குள் FASTag பரிவர்த்தனைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
வாகனம் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது FASTag நிலை குறித்து கையகப்படுத்தும் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடாகும். வாடிக்கையாளர்கள் சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பு எந்த நேரத்திலும் FASTagயை ரீசார்ஜ் செய்யலாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது போன்று அனைத்து சுங்கச்சாவடிகளையும் மாற்ற திட்டமிட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் UPI, நெட் பேங்கிங் போன்ற பல்வேறு கட்டண வசதிகளை பயன்படுத்தி டோல் கட்டண மையத்தை அடைவதற்கு முன்பு எந்த நேரத்திலும் தங்கள் FASTagயை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.