சாம்பியன்ஸ் டிராபி 2025: வெளுத்து வாங்கிய விராட் கோலி; சுருண்டு வீழ்ந்த பாகிஸ்தான்..!
Seithipunal Tamil February 24, 2025 09:48 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.  இன்று டுபாயில் நடைபெற்ற  லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இபோட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தெரிவுசெய்து விளையாடியது. 

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 03 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். 

இதில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இதில் நிதானமாக ஆடிய சுப்மன் கில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.  மறுபுறம் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இணை நிதானமாக ஆடினர்.  நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்னிலும், அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 09 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியில் விராட் கோலி 100 (111) ரன்களும், அக்சர் படேல் 03 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 04 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகின் அப்ரிதி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.