அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து புதுடெல்லிக்கு செல்லும் நேரடி சேவையான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நடுவழியில் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் தரையிறக்கப்பட்டது.
நியூயார்க் நகரிலிருந்து நாள் தோறும் புது டெல்லிக்கு நேரடி சேவையை வழங்கி வருகிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம். 199 பயணிகளுடன் நியூயார்க் நகரிலிருந்து கிளம்பிய இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் டெல்லி விமான நிலையத்திற்கு தெரிய வந்ததால், விமானத்தை சோதனை செய்த பின்னரே டெல்லியில் தரையிறக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு விமானம் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு திசை திருப்பி அனுப்பபட்டது. இரண்டு இத்தாலி நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்புக்காக உடன் பறந்து வர ரோம் நகர லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு தரையிறங்கிய விமானத்தை முற்றிலுமாக சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவல் என்று தெரியவந்துள்ளது. பின்னர் உரிய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு டெல்லிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
விமானத்தில் பயணம் செய்த யாஷ் ராஜ் என்ற பயணி, இத்தாலி போர் விமானங்கள் பாதுகாப்புக்கு வந்ததை வீடியோ எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு கருதி விமானம் திசை திருப்பி அனுப்பப்படுகிறது என்று தான் விமானி கூறினார். வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக சொல்லவில்லை. விமான பணியாளர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை மிகவும் சரியாக கையாண்டார்கள் என்றும் யாஷ் ராஜ் கூறியுள்ளார்.