சேலம் மாவட்டம் மாரமங்கலத்திற்கு 27 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க புறப்பட்டனர். அங்கு 27 வயது விஜய் என்ற இளைஞர் உட்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரணப் பாறை' என்று கூறப்படும் இடத்துக்கு சென்றனர்.
உற்சாக மிகுதியில் பாறையில் நின்றபடி விஜய் 'செல்பி' எடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கால்தவறி கடலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜய்யை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினார். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கடலில் மூழ்கிய இளைஞரை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் தீவிரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து 2வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி விஜய்யின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கிவிட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.