வங்க கடலில் காற்று சுழற்சி... மார்ச் 1ம் தேதி வரை தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
Dinamaalai February 28, 2025 12:48 PM

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் மார்ச் 1ம் தேதி வரை தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் பிப்ரவரி 28ம் தேதி காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். தென்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

வங்கக்கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் மாா்ச் 1ம் தேதி வரை தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் லேசான பனிமூட்டம் நிலவும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.