‘புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைக்கப்படும். அப்படிச் செய்தால், மக்கள் தொகை அதிகமாக உள்ள வடமாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும். குறைவான மக்கள் தொகை கொண்ட தென்மாநிலங்களில் தொகுதிகள் குறைக்கப்படும்’ என்று சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு’ என்பது 50 ஆண்டு களாகவே பேசப்படுகிறது. 1976-ல் பிரதமர் இந்திரா காந்தி, 25 ஆண்டுகளுக்கு இதைத் தள்ளிவைத்தார். 2000-ல் பிரதமராக இருந்த வாஜ்பாயும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட்டார். எனவே, 543 தொகுதிகள் என்பதே இன்று வரையிலும் தொடர்கிறது. 25 ஆண்டு கால அவகாசம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தொகுதி மறுசீரமைப்புப் பேச்சுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. ‘இதன் காரண மாகத் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையும்; நம் குரல் அங்கே எடுபடாமல் போகும்’ என்று தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
1970-க்குப் பிறகு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி களைச் சிரத்தையுடன் கடைப்பிடித்தது தென் மாநிலங்கள்தான். குறிப்பாக, தமிழ்நாடு! இதுபோலவே நாட்டின் நலனுக்காகக் கொண்டுவரப்படும் பெரும்பாலான சட்டங்களையும் முயற்சிகளையும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள்தான் சிறப்பாகப் பின்பற்றி வந்திருக்கின்றன/வருகின்றன. இதன் பலனாகவே பொருளாதார, சமூக முன்னேற்ற அம்சங்கள் பலவற்றில் தென்மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
இத்தகைய சூழலில், ‘சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவியதற்கு தரப்படும் தண்டனையா இது?’ என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதானே! இது, தனிப்பட்ட வகையில் நாம் ஒவ்வொருவருமே கவலைப்பட வேண்டிய விஷயம்தானே. பொருளாதாரம், வளர்ச்சித் திட்டங்கள், நிதிப்பகிர்வு என்று பல வகைகளிலும் பாதிக்கப்படப்போவது நாம்தானே!
இதைப் பற்றி விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், அண்மையில் கோயம்புத்தூருக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘விகிதாசார அடிப்படையில் இந்தியாவில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்துக்கு ஒரு தொகுதிகூட குறையாது’ என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த விகிதாசாரம் என்பது... மக்கள்தொகை அடிப்படையிலான விகிதாசாரமா... ஏற்கெனவே இருக்கும் தொகுதிகளின் அடிப்படையிலான விகிதாசாரமா என்பதை அவர் விளக்கவில்லை. இப்போது இருக்கும் தொகுதி களின் அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டால் பிரச்னை இல்லை. அதைவிடுத்து, மக்கள் தொகை அடிப்படையில் யோசித்தால்... தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மத்திய அரசு இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தாத வரை... தென்மாநிலங்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டுதான் இருக்கும்!
- ஆசிரியர்