சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாரு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் நேற்று ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர் ஆஜராகினார். இதனையடுத்து இன்று ஆஜராக வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என போலீசார் நேற்று அவரது வீட்டில் சம்மன் ஒட்டினர். இந்த சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு காவல் துறையினர் சம்மன் வழங்கியிருந்த நிலையில், மாலை ஆஜராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சீமான் விசாரணைக்கு ஆஜராக முடியாது, முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.