தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் அந்தந்த மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 4 : நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விடுமுறை
மார்ச் 4ம் தேதி அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினம் வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன. இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா மார்ச் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருவிழாவில் உள்ளூர் மக்களும் கலந்தும் கொள்ள வசதியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்வதற்காக மார்ச் 15 தேதி சனிக்கிழமை முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.