நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் நேற்று போலீசார் சம்மன் வழங்கச் சென்ற விவகாரத்தில் அவரது வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அமர்வு முன்பு, விஜயகுமார் என்ற வழக்கறிஞர் ஆஜரானார். அவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் காவல்துறை அத்துமீறி உள்ளதாகவும் இரண்டு பேரை அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் இது குறித்த ஆட்கொணர்வு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நீதிபதிகள் போலீசார் கைது செய்தால் 24 மணி நேரம் அவர்களுக்கு உள்ளது . அந்த 24 மணி நேரத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள். அதையெல்லாம் நீங்கள் சரிபார்த்த பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் எனக் கூறி இதனை அவசர வழக்கை விசாரிக்க முடியாது என கூறி மறுப்பு தெரிவித்தனர்.