ரீல்ஸ் எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இன்ஸ்டா பிரபலம் கைது.!
Seithipunal Tamil March 13, 2025 04:48 AM

பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி பிரபலமான வாலிபர் ஒருவர், தன்னுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஹபீஸ் சஜீவ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக மாறினார். இந்த நிலையில் அவருக்கு ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

அதன் படி அந்த பெண் ஹபீஸ் சஜீவுடன் நட்பாக பழகியதைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து ஹபீஸ் சஜீவ் 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதற்காக அந்த இளம்பெண்ணை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், திருமணம் செய்வதாக கூறி, பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஹபீஸ் சஜீவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹபீஸ் சஜீவ் மீது ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹபீஸ் சஜீவை கைது செய்தனர். ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை வாலிபர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.