டாஸ்மாக் ஊழல், முறைகேடுகள் குறித்த அமலாக்கத்துறை சோதனையயின் அறிக்கை, கடந்த இரு வாரங்களாக ‘மொழி நாடகத்தை’ திமுக நடத்தி வருகிறது என்ற நம் கருத்தை, விமர்சனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விசாரணை மேலும் தொடரும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை எதிர்பார்த்து தான் மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறை- மாநில உரிமைகள் என கபட நாடகத்தை திமுக நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.
மதுபான ஆலைகள், டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பார் நடத்துபவர்கள் என ஒட்டுமொத்த அமைப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. தமிழர்களின் உயிரை பறித்து கொண்டிருக்கும் மது, இப்போது ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டிருப்பது தமிழக அரசுக்கே அவமானம், தலைகுனிவு.
இந்த ஊழல் திட்டமிடப்பட்ட ஊழல். இதற்கான முழு பொறுப்பையும் தமிழக முதல்வரே ஏற்க வேண்டும். இத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை மது ஆலைகள், டாஸ்மாக் நிறுவனம், மதுக்கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.