தமிழக அரசின் பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழக அரசில் தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "2021 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு என்பது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த வகையிலும் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
2021-26 திராவிட மாடல் ஆட்சியில் தற்போது வெளியிடப்பட்ட ஐந்தாவது 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் இதே நிலைதான் தொடர்கிறது.
சொல்லாதையும் செய்வோம் என்ற நிலைப்பாடு இதுவரை தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில், அடுத்த நிதியாண்டிற்கான அறிவிப்பாக வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பினை, ஏதோ ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது கரிசனம் உள்ளதைப் போல் 1-4-2026 முதல் செயல்படுத்தப்படும் என்ற ஊழியர் விரோத போக்கினை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அடுத்த நிதியாண்டிற்கான திராவிட மாடல் அரசின் பட்ஜெட் என்பது இடைக்கால பட்ஜெட் தான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அமரப் போகிறவர்கள்தான் இந்திய அரசியலமைப்பின்படி 2026-27 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய இயலும்.
2026-27 சரண்டர் வழங்குவதற்கான செலவினத்தினை மேற்கொள்வதற்கு பட்ஜெட்டில்தான் நிதி ஒதுக்கம் செய்ய இயலும் என்று தெரிந்திருந்த போதும், தற்போது ஏதோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது கருணை உள்ளத்தோடு நாங்கள் செயல்படுகிறோம் என்ற பொதுமக்கள் பார்வையில் பொய்யான பிம்பத்தினை கட்டமைக்கும் நோக்கம் என்பது கேலிக் கூத்தானது.
இந்த அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க நிதி மேலாண்மை விழுமியங்களுக்கு எதிரானது. சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு
2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு அளித்த முதன்மையாக வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவும் மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரிகள் குழு அமைத்து அதற்கு ஒன்பது மாதங்கள் கால அவகாசம் வழங்கியபோதே, திராவிட மாடல் அரசு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தாது என்பது நிரூபணம் ஆகியிருந்தது. தற்போது 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் பழைய ஓய்வூதியம் குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடாதது என்பது நாங்கள் சொன்னதைச் செய்ய மாட்டோம் என்பதற்கு சாட்சியம் அளித்துள்ளது.
காலிப் பணியிடங்களைப் பொறுத்தவரையில், கடந்த நான்காண்டுகளில் 78,882 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாவும் இந்த ஆண்டில் மட்டும் 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாண்புமிகு நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசிலுள்ள 4 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்தவித முன்மாதிரி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இது ஆட்சி நிர்வாகத்தினை வெகுவாக பாதிக்கும் என்பதோடு, படித்த இளைஞர்களின் அரசு வேலைக் கனவினைச் சிதைப்பதோடு, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியினையும் சிதைக்கிறது.
ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒருநிலைப்பாடும் தமிழகத்தின் முதலமைச்சராக அமர்ந்தபின்னர் வேறொரு நிலைப்பாடும் எடுப்பது என்பது மாண்புமிகு முதலமைச்சரின் மீதான நம்பகத்தன்மையினை இழக்கச் செய்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சரின் இந்த போக்கு என்பது ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அச்சத்தினை உருவாக்கக் கூடியது.
மொத்தத்தில் இந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எதிரான பட்ஜெட். தேர்தல் வாக்குறுதிகளை நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என்ற சமூகத்தினை புறக்கணித்திருக்கிறது திராவிட மாடல் அரசு.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கோரிக்கைகளை வெல்வதற்கும் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராகவும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மிகுந்த எழுச்சியோடு களம் காணத் தயராகி விட்டனர்.
2024 பாராளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாஜக அரசு குறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பொன்வரிகளான “பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் மாண்புமிகு எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் அவர்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலின்போது சுட்டிக்காட்டிய ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியினை ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் "மறக்கல, மறுக்கல" என்பதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடமைப்பட்டுள்ளது.