மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ஹிந்துக்கள் பங்குபெறும் 02 ஆயிரம் ராம நவமி பேரணிகள்; சுவேந்து அதிகாரி அறிவிப்பு..!
Seithipunal Tamil March 15, 2025 06:48 AM

எதிர்வரும் ஏப்ரல் 06-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராம நவமி கொண்டாடப்படவுள்ளது. இந்த நன்னாளில் மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்கும், 02 ஆயிரம் ராம நவமி பேரணிகள்  நடத்தப்படும் என அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ''கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடி இந்துக்கள் '2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்வார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை எனவும், கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வருட இறுதிக்குள் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சுவேந்து அதிகாரி போன்ற பாஜக தலைவர்களின் எந்த வார்த்தை ஜாலங்களாலும் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். மத சடங்குகளை கடைபிடிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வழியில் கொண்டாடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. என மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.