‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’. இதைக் காலாகாலத்தில் செய்தால் தான் நமது வாழ்க்கை சிறக்கும். உரிய நேரத்தில் பயிரிட்டால்தான் அதை அறுவடை செய்யும்போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அதுபோலத் தான் திருமணம். தகுந்த பருவத்தில் கல்யாணம் முடிக்கும்போதுதான் சுகதுக்கங்களை நாம் ரசிக்க முடியும். அதற்குரிய அனுபவமும் நாளடைவில் முதிர்ச்சி அடையும். நமது பிள்ளைகளையும் கரைசேர்த்து பேரன், பேத்திகளையும் காண முடியும்.
அதே நேரம் இன்றைய இளைஞர்கள் பலரும் திருமணம் செய்வது ஏன் என்றே தெரியாமல் முடித்து விட்டு அப்புறம் ஈகோ பிரச்சனையால் எளிதில் விவாகரத்தும் செய்து விடுகின்றனர். இதற்கு திருமணம் முடிக்காமலேயே இருந்து விடலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்றப்படும். இதுல பெண்களுக்கும் இதே போன்ற ஈகோ வருகிறது. அதனால் இதுல யாரையும் குறிப்பிட்டுக் குறை சொல்ல முடியாது. அதே நேரம் திருமணம் முடிக்கப் போகிறீர்களா?
அதற்கு நீங்கள் தகுதியானவர்களா என்பதை கீழ்க்கண்ட சில தகுதிகளின் அடிப்படையில் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகுதிகள் உங்களிடம் இல்லாவிட்டால் தயவு செய்து திருமணம் செய்யாதீர்கள். அதை வளர்த்துக் கொண்டு செய்தால் உங்களுக்கும் நல்லது. உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது. என்னன்னு பார்க்கலாமா…
திருமணம் என்பது நீங்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம். உங்களால் விட்டுக்கொடுக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். உங்களால் மன்னிக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
️நீங்கள் விரும்பிய ஒன்றை பிறருக்காக தியாகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். உங்கள் சுகம் மட்டும் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். நீங்கள் உங்கள் இஷ்டப்படி மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள்
திருமணம் செய்யாதீர்கள். நீங்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கண்டபடி செலவழிப்பவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்தது மாத்திரம் தான் நடக்க வேண்டுமென்ற கோட்பாட்டில் நீங்கள் இருந்தால் திருமணம் செய்யாதீர்கள்.
️ உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். உங்களுக்காக மாத்திரம் வாழ வேண்டும் என்ற சுயநலம் கொண்டவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். திருமணம் என்பது நம் குணாதிசயங்கள் சோதிக்கப்படும் ஒரு பாசறை.
திருமணம் என்பது, நாம் நமக்காக மட்டும் வாழும் வாழ்க்கையல்ல, நம்மோடு கை கோர்த்து வருவோருக்காகவும் வாழ்வதாகும். திருமணம் என்பது பணிகளையும் அர்ப்பணிப்புக்களையும் பரிமாறிக் கொள்வதாகும். தன் சுகத்தையும், தன் திருப்த்தியையும் மாத்திரம் பார்ப்பவர்கள் பயணத்தின் நடுவில் சோர்வடைந்து விடுவார்கள். திருமணம் என்பது ஒரு அழகான பந்தம் தான். ஆனால், அது லேசான பந்தம் என்று யாரும் சொல்லவே இல்லை..