ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்- கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
BBC Tamil March 19, 2025 10:48 AM
NASA சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்களுடன் டிராகன் விண்கலம் கடலில் விழுந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.

இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.

ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர்.

சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்கின்றனர்.

சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் மூலமாக கடந்தாண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.

அவர்களுடன் பூமிக்குத் திரும்பிய ஹேக், கோர்புனோவ் ஆகிய இருவரும் 6 மாத பயணமாக ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் கடந்த செப்டம்பரில் அங்கு சென்றனர். திட்டக்காலம் நிறைவடைந்துவிட்டதால் அவர்களும் சுனிதா, வில்மோருடன் இணைந்து பூமிக்குத் திரும்பினர். அவர்களை பூமிக்கு அழைத்து வந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் 4 இருக்கைகள் உள்ளன.

NASA ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தால் ஏற்பட்ட காலதாமதம்

61 வயதான வில்மோர், 58 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக கடந்தாண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது.

இந்த ஸ்டார்லைனர் விண்கலம் மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் ஆகும். வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது இருந்தது.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்னைகளை சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவது தாமதமானது.

அதன்பிறகு அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது.

BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய

இரு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியதாக அதன் நிறுவனர் மஸ்க் கூறினார்.

"சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது," என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டார்.

முதலில் அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸின் பின்னணி Getty Images 2013-ஆம் ஆண்டு மும்பை புறநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட படம்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்ட பெண்களில் இரண்டாவது இடத்தில் (9 முறை 62 மணி 6 நிமிடம்) உள்ளார்.

"விண்வெளியில் இருந்து நாம் வாழும் இந்த பூமியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்" - இது தனது விண்வெளி பயணங்கள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த வார்த்தைகள்.

தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளி பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள இவருக்கு உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது.

சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.

1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி.

சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.

படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார்.

EPA புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணங்கள்

2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14 குழுவுடன் பணிகளைத் தொடர்ந்த அவர் Expedition 15 விண்கலத்தில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார்.

2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார்.

2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தார்.

ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்து நீண்டது.

2025, மார்ச் 15ஆம் தேதி இவர்கள் இருவரையும் அழைத்துவர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை தொடர ஏதுவாக புதிய குழுவினர் அந்த விண்கலத்தில் சென்றனர்.

க்ரூ-10 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா கூறியது.

பிறகு, மார்ச் 17 இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தங்களது பயணத்தை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தொடங்கினார்கள்.

59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா தொடர்ந்து கூறிவந்தது. இறுதியாக அவர் இன்று (மார்ச் 18) பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.