சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம்: ஸ்டார்லைனர் முதல் டிராகன் வரை - என்ன நடந்தது? முழு விவரம்

Getty Images
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்ளாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளா. இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்டோரை நாசா மீட்புக் குழுவினர் விண்கலத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர்.
இவர்கள் ஸ்டிரெக்சர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சியையும் நாசா வெளியிட்டுள்ளது. விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வெறும் 8 நாட்களுக்கு திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் விண்வெளி பயணம் 9 மாதங்களுக்கு நீண்டது எப்படி? அந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை கால அட்டவணைப்படி சற்று பின் நோக்கி காணலாம்.
- மே6, 2024 : இந்த நாளில் தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. வணிக ரீதியான விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்டார்லைனர் விண்கலத்திற்கான சோதனை ஓட்டம் இது என்பதால் வெறும் 8 நாட்கள் மட்டுமே பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்கலத்தை ஏவும் ராக்கெட்டில் இருக்கும் ஆக்சிஜன் வால்வில் பிரச்னை கண்டறியப்பட்டதால், இம்முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.
- மே23, 2024 : ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கும் கருவிகள் அமைந்திருக்கும் சர்வீஸ் மாட்யூல் பகுதியில் ஹீலியம் வாயு கசிவு கண்டறியப்பட்டதாக நாசா அறிவித்தது. இதனால் விண்கலத்தை ஏவும் திட்டம் மீண்டும் தள்ளிப்போனது.
- ஜூன் 1, 2024 : திட்டமிடப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம், ராக்கெட் ஏவப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கணினி மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.
- ஜூன் 5,2024 : பல கட்ட தாமதங்களுக்குப் பின்னர், ஃபுளோரிடாவின் கேப் கேனவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் வெறும் 8 நாட்கள் பயணத்திற்குப் பின்னர் ஜூன் 14-ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
- ஜூன் 6, 2024 : ஸ்டார்லைனர் பயணத்தின் போது, ஹீலியம் வாயுக்கசிவு கண்டறியப்பட்டது. விண்கலத்தை சரியான திசையில் செலுத்தும் உந்துகருவியிலும் (Thruster) சில பிரச்னைகள் அச்சுறுத்தின. இருந்த போதிலும், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஸ்டார்லைனர் விண்கலம் இணைக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.
- ஜூன் 11, 2024 : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்பும் பயணத்தை ஜூன் 18 வரை தள்ளி வைப்பதாக நாசா அறிவித்தது. ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீலியம் வாயு கசிவு கண்டறியப்பட்டதாக இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டியது.இருவரையும் பூமிக்கு அழைத்துவர ஸ்டார்லைனர் விண்கலம் தகுதியானது தானா என்பது குறித்து கேள்வி எழுந்தது.
- ஜூன் 18, 2024 : விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதை மீண்டும் தள்ளி வைப்பதாக அறிவித்தது நாசா. இதற்கிடையே விண்வெளி வீரர்கள் குழு ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துக்கலன் கருவியின் பழுதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- ஆகஸ்ட் 24, 2024: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார்லைனர் அல்லாத வேறு விண்கலம் மூலமாகத்தான் பூமிக்கு திரும்ப வேண்டும் என நாசா அறிவித்தது. இந்த திட்டம் 2025 ல் தான் நிறைவேற்ற சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது
- செப்டம்பர் 7,2024: ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்களின்றி பூமியை வந்தடைந்தது.
- செப்டம்பர் 28,2024: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை அழைத்து வருவதற்கான மாற்றுத் திட்டம் செயல்படத் தொடங்கியது. இந்நாளில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விண்வெளி வீரர் நிக் ஹாக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். இவர்களை அழைத்துச் சென்றது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலமாகும். க்ரூ9 என்றழைக்கப்பட்ட இந்த குழு விண்வெளிக்கு செல்லும் போது, இரண்டு இருக்கைகள் காலியான நிலையில் விண்கலம் பயணித்தது. இந்த இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக ஒதுக்கப்பட்டிருந்தன
- அக்டோபர் 29,2024 : விண்வெளியில் இருந்தவாறே தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ், தமது தந்தையை நினைவு கூர்ந்து பூமியில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
- நவம்பர் 5,2024 : அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்தவாறே தனது வாக்கினை பதிவு செய்தார் சுனிதா வில்லியம்ஸ். பூமியிலிருந்து 400 கி.மீ. தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்-ன் வாக்கு மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய காலங்களிலும் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பதிவு செய்துள்ளனர்.
- டிசம்பர் 25, 2024: இந்த ஆண்டின் கிறிஸ்துமசை சுனிதா உள்ளிட்டோர் விண்வெளி நிலையத்திலிருந்தே கொண்டாடினர். அங்கிருந்து பூமியில் உள்ள தங்களின் அன்புக்குரியவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
- ஜனவரி,2025: மாதத்தின் நடுவே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையில் ஈடுபட்டனர். சக விண்வெளி வீரரான நிக் ஹாகையும் உள்ளடக்கிய இந்த பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்கானதாக இருந்தது.
- மார்ச் 8, 2025: விண்வெளியில் உள்ள வீரர்களை பரிமாற்றம் செய்வதற்காக க்ரூ10 விண்கலம் ஏவப்படுவதற்கு தயாரான நிலையில், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமி திரும்புவதற்கான திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது.
- மார்ச் 12,2025: க்ரூ10 திட்டம் விண்கலம் ஏவப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக கூறப்பட்டது.

Getty Images
- மார்ச் 14,2025: புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து க்ரூ10 திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் விண்வெளியில் ஏவப்பட்டது.
- மார்ச் 16,2025: க்ரூ10 குழுவினர் சென்ற விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னர் எற்கெனவே விண்வெளியில் இருந்த குழுவினர், புதிய குழுவினரிடம் பணிகளை ஒப்படைத்தனர்.
- மார்ச் 18,2025: க்ரூ9 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு பூமியை நோக்கி பயணித்தது. இந்திய நேரப்படி மார்ச் 19ம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு ஃப்ளோரிடா கடற்பரப்பில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.