ஐபிஎல் தொடரில் ஒருகாலத்தில் மினிமம் 150 ரன்கள் அடித்தால் கூட எதிரணி சற்று போராடிதான் வெற்றிபெறும். எந்த அணியாவது 200 அடித்துவிட்டால் அவர்கள்தான் வெற்றி. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. முதலில் பேட் செய்யும் அணி 250 ரன்கள் அடித்தாலும் வெற்றிக்கு போராட வேண்டியிருக்கிறது. கடந்த சீசனில் மட்டும், 8 முறை 250+ ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, ஹைதராபாத் அணி 287, 277, 266 என மூன்று முறை 250+ ரன்கள் அடித்தது. அதேபோல், ஒரு போட்டியில் கொல்கத்தா அடித்த 261 ரன்களை பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றிபெற்றது.
இந்த சீசனில் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் அடிக்கப்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஐபிஎல் மட்டுமல்லாது உலகம் முழுக்கவே பேட்ஸ்மேன் போட்டியாக கிரிக்கெட் மாறிவருவது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தாலும், பவுலர்கள் பக்கமும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆனால், பவுலர்களின் குணமே பேட்ஸ்மேன்களுக்கு சவால்விடுவதுதான். அப்படியான வலிமையான பவுலிங் யூனிட் எந்த ஐபிஎல் அணியிடம் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அதை நடப்பு சாம்பியனிடமிருந்தே தொடங்கலாம்...
SWOT Analysis - Strengths, Weaknesses, Opportunities, and Threats கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)கடந்த சீசன் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் ஐதராபாத் தோற்றதற்கு முக்கியமான காரணம், ஸ்டார்க், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இல்லாததே. இப்போது, ஸ்டார்க்கை கொல்கத்தா அணியில் ஏலத்தில் விட்டபோதும், அந்த அணியின் பவுலிங் யூனிட் சற்று வலிமையாகவே தோற்றமளிக்கிறது.
சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஆன்ரிக் நோர்க்கியா, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, சேட்டன் சக்காரியா ஆகியோர்தான் முழுநேர பந்துவீச்சாளர்கள். மொயின் அலி, ரஸல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் பந்துவீசக்கூடும்.
இவர்களில், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர்தான் அனைத்து அணிகளுக்கும் தொல்லை தரக்கூடிய மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள். வேகப்பந்துவீச்சில், ஹர்ஷித் ராணாவுடன் கைகோர்க்கப்போவது யார் என்பது புலப்படவே இல்லை. ஹர்ஷித் ராணா வேகமாக பந்துவீசக்கூடியவராகவும், பவுன்சர் போடக்கூடியவர்கத் தெரிந்தாலும் அதைத்தாண்டி அவரிடம் வேரியேஷன் பெரிதாக இல்லை. கிட்டத்தட்ட ஆன்ரிக் நோர்க்கியாவும் அதே ராகம்தான். வேறு ஆப்ஷன்களாக வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், சேட்டன் சக்காரியா இருக்கின்றனர். இந்த இடத்தில்தான் ஸ்டார்க்கின் இடத்தை நிறைவுசெய்வது கொல்கத்தாவுக்கு பெரிய சவாலாக இருக்கப்போகிறது. அதைச் சரியாக நிரப்பிவிட்டால், கொல்கத்தாவின் பவுலிங் யூனிட் நிச்சயம் மற்ற அணிகளுக்கு சவலாளிக்கக் கூடியதாக இருக்கும்.
டெல்லி கேபிட்டல்ஸ் (DC)அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஸ்டார்க், நடராஜன், மோஹித் சர்மா, முகேஷ் குமார் இவர்கள்தான் டெல்லி அணியின் ஆஸ்தான பவுலர்கள். ஆன் பேப்பரில் இந்த சீசனின் மிகச்சிறந்த பவுலிங் டெல்லி கேபிட்டல்ஸ்தான். கடந்த சீசனில் லீக் மேட்சுகளில் சைலண்டாக இருந்த ஸ்டார்க், பிளே-ஆஃப் வந்ததும் அவரின் கைகளிலிருந்து பந்து எப்படி சீறியது என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள். அவரின் அனுபவமே பவுலிங்கில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுபோல, யார்க்கர் நடராஜன், தேவையான நேரத்தில் விக்கெட் எடுத்துக்கொடுக்கும் மோஹித் சர்மா, டெல்லியின் கன்சிஸ்டன்சி பவுலர் முகேஷ் குமார் ஆகியோர் வேகப்பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சாம்பியன்ஸ் ட்ராபியில் கொடுத்த பங்களிப்பை குறையாமல் இங்கும் கொடுத்தால் நிச்சயம் மேட்ச் வின்னிங் பவுலிங் யூனிட்டாக இது அமையும்.
சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH)பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், உனாத்கட், சிமர்ஜீத் சிங், நிதிஷ்குமார் ரெட்டி, ராகுல் சாகர், ஆடம் சாம்பா ஆகியோரே இந்த அணியின் முக்கிய பவுலர்கள். இதில், பேட் கம்மின்ஸ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஹர்ஷல் படேல் அல்லது உனாத்கட் அல்லது சிமர்ஜீத் சிங் அல்லது நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய நான்கு பேரில் யாராவது ஒருவர் ஓரளவு கைகொடுத்தாலே வேகப்பந்துவீச்சு சிறப்பாக அமைந்துவிடும்.
ஆனால், சுழற்பந்துவீச்சில் ராகுல் சாகர், ஆடம் சாம்பா ஆகிய இருவருமே மேட்ச் வின்னிங் ஸ்பின்னர்களாக இல்லை. கடந்த சீசனைப் போலவே, இம்முறையும் பேட்டிங் தரமாக இருந்தும் முழுமையான பந்துவீச்சு யூனிட் இல்லை என்றே சொல்ல முடியும்.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)பஞ்சாப்பின் முதன்மை பந்துவீச்சாளரே அர்ஷ்தீப் சிங் தான். வேகப்பந்துவீச்சில் இவருக்கு உறுதுணையாக ஹர்பிரீத் ப்ரார், சாம்பியன்ஸ் டிராபியில் நன்றாக விளையாடிய அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ யான்சென் ஆகியோர் ஃபார்மில் இருக்கின்றர். மறுபக்கம், சுழற்பந்துவீச்சுக்கு சஹாலும், அவருக்கு ஆதராவாக மேக்ஸ்வெல்லும் இருக்கிறார்.
இவர்களோடு ஃபெர்குசன், ஸ்டாய்னிஸ், குல்தீப் சென், வைஸாக் விஜய் குமார் ஆகியோர் உட்பட ஆல்ரவுண்டர்களும் குவிந்து கிடக்கின்றனர். இவர்களில், பிளெயிங் லெவனுக்கு யார் யாரைத் தேர்வு செய்வதென்பதே பஞ்சாப் அணிக்கு பெரும் சவலாகத்தான் இருக்கும். சாம்பியன் கேப்டன் ஸ்ரேயாஸின் வருகை பஞ்சாப்புக்கு பாசிட்டிவிட்டி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)சின்னசாமி ஸ்டேடியத்தில் மேட்ச் என்றாலே பவுலர்களுக்கு சவாலான போட்டிதான். ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயாள், நுவான் துஸாரா, லுங்கி இங்கிடி ஆகியோர் வேகப்பந்துவீச்சுக்கு கேரண்ட்டியாக பலம் சேர்க்கின்றனர். ஆனால், சுழற்பந்துவீச்சில்தான் சுயாஸ் ஷர்மா, குருணால் பாண்டியா ஆகியோரைப் பார்க்கும்போது நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் இல்லை.
சஹால் சென்ற பிறகு பல வருடங்களாக வெற்றிடமாக இருக்கும் ஸ்பின்னர் இடத்தை மட்டும் பெங்களூரு அணி சரியாக நிரப்பிவிட்டால், `ஈ சாலா கப் நமதே' என்பது இந்த முறையாவது நிஜமாகலாம்.
குஜராத் டைட்டன்ஸ் (GT)ரஷீத் கான் மற்றும் ரபாடா ஆகிய இருவர்தான் குஜராத்தின் பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்குகின்றனர். இதில், சுழற்பந்துவீச்சில் ரஷீத் கானுக்கு சப்போர்ட்டாக வாஷிங்டன் சுந்தர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதேபோல், வேகப்பந்துவீச்சில் ரபாடாவுக்கு உறுதுணையாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெரால்டு கோட்சீ மற்றும் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா ஆகியோர் இருக்கின்றனர்.
கூடவே பார்ட் டைம் பவுலர்களாக ராகுல் தேவாட்டியா, சாய் கிஷோர், சாய் சுதர்ஷன் ஆகியோரும் இருக்கின்றனர். ரஷீத் கான், ரபாடாவுக்கு சரியான பவுலிங் சப்போர்ட் அமைந்துவிட்டால் நிச்சயம் வலுவான பவுலிங் யூனிட்டாக இது மாறும்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG)லக்னோ அணியின் சென்சேஷன் பவுலரான மயங்க் யாதவ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என வெளியாகும் செய்திகள் தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. இவரைத் தவிர்த்துப் பார்த்தால் ஷமார் ஜோசப், ரவி பிஸ்னாய் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடிவரும் ஆவேஷ் கான் விக்கெட் எடுத்துக்கொடுப்பவராக அணியில் இருந்தாலும், எதிரணிக்கு ரன்களை அவர் வாரி வழங்குவது சற்று பின்னடைவுதான். மற்றபடி, ஆகாஷ் தீப், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரான், டேவிட் மில்லர், மார்க்ராம் ஆகிய முக்கிய பேட்மேன்ஸ்களுக்கு சிரமமிருக்காது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)ஐபிஎல் ஓப்பனிங் சீசனுக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் அணி இந்த சீசனில், தங்களின் முக்கிய பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரை விடுவித்தது, 13 வயது வீரரை அணியெலெடுத்தது என சில பரிட்சார்த்த வேலைகளைச் செய்திருக்கிறது. ட்ரென்ட் போல்ட்டை ஏலத்தில் விட்டுவிட்டு ஆர்ச்சரை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்தாலும், அவரளவுக்கு இப்போது ஆர்ச்சர் அவ்வளவாக ஃபார்மில் இல்லை.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஆர்ச்சரின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால், அவரின் இந்த ஃபார்ம் ஐபிஎல்லில் மாறவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆர்ச்சர் ஃபார்முக்கு வந்தால் நிச்சயம் பவுலிங் யூனிட்டுக்கு அது கூடுதல் பலம்தான். ஏனெனில், ஏற்கெனவே சந்தீப் சர்மா, ஃபசல் ஃபரூக்கி, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா ஆகியோர் பவுலிங் யூனிட்டை சற்று பலமாகவே வைத்திருக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் (MI)பும்ரா என்ற ஒற்றைப் பெயரே மும்பை அணியின் ஒட்டுமொத்த பவுலிங் யூனிட்டுக்கு பலம் சேர்க்கிறது. பவர் பிளேயில் ட்ரென்ட் போல்ட், தீபக் சாகர், பும்ரா ஆகியோரும் டெத் ஓவரில் மீண்டும் போல்ட், பும்ரா, நடுவில் சுழற்பந்துவீச்சுக்கு இன்-ஃபார்ம் ஸ்பின்னர் மிட்செல் சான்ட்னர், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் என ஒட்டுமொத்த பவுலிங் யூனிட் பலமாக இருக்கிறது. இவர்கள் மட்டுல்லாது, ரீஸி டாப்லி, கரண் சர்மா ஆகியோரும் பவுலிங்கில் இருக்கின்றனர்.
ஆனாலும், பவுலிங் யூனிட்டில் பும்ராவைத் தவிர்த்து வெளிநாட்டு வீரர்களைத்தான் பெரிதும் அணி நம்பியிருக்கிறது. 4 வெளிநாட்டு பிளேயர் மட்டுமே பிளெயிங் லெவனில் இறக்க முடியும் என்பதால் அதில் மூன்று பேரை பவுலர்களாக இறக்க அணி நிர்வாகம் முடிவெடுக்குமா என்பது களத்தில்தான் தெரியும். இதைவிட, இப்போதைக்கு அணிக்கு இருக்கும் பெரிய தலைவலி, பும்ரா எப்போது அணியில் இணைவார் என்பதே. அணியில் அவர் இணையும்வரை பிற அணிகளுக்கு மும்பையுடனான ஆட்டத்தில் சிரமம் இருக்காது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)பத்திரானா, அஸ்வின், ஜடேஜா, நூர் அஹமது, சாம் கரண், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், கலீல் அகமது, ஷ்ரேயஸ் கோபால் என முழு நேர பந்துவீச்சாளர்களும், ரச்சின் ரவீந்திரா, விஜய் ஷங்கர், ஷிவம் துபே ஆகிய பகுதிநேர பந்துவீச்சாளர்களும் என பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.
இதிலிருக்கும் பெரிய பிரச்னையே மற்ற அணிகளில் நம்பர் ஒன் பவுலராக மினிமம் ஒரு பவுலராவது இருப்பார். ஆனால், இங்கு எல்லோரும் இப்போதைக்கு டீசன்ட் பவுலர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர டாப் க்ளாஸ் பவுலர் என்று யாரும் இல்லை. ஒரு சில போட்டிகளை ஆடிய பிறகுதான் ஒரு நிலையான பவுலிங் யூனிட்டை அணி கட்டமைக்கும் வாய்ப்பிருக்கிறது.
ஒவ்வொரு அணியின் பந்துவீச்சும் இவ்வாறு மாறுபட்டாலும் களத்தில் இறங்கியபின் ஆட்டமே வேறு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்துவீச்சாளரை சரியான நேரத்தில் பயன்படுத்தும் அணிதான் வெற்றிபெறும். எனவே, உங்கள் பார்வையில் எந்த அணியின் பவுலிங் யூனிட் சிறப்பாக இருக்கிறது என்பதை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK