38 வயதான ஜப்பானியப் பெண் அகி டோய், 2022 ஆம் ஆண்டு முதன் முறையாக ஒடிஸாவிற்கு வருகை தந்தார். அப்போது ஒடிசாவின் பூரி மாவட்டம் அவருக்கு பிடித்துப் போயிருக்கிறது. இசை மற்றும் யோகா பயிற்றுவிப்பாளரான டோய், தற்போது அவர் இருக்கும் பகுதியை தூய்மைபடுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர் தினமும் காலையில் பூரி கடற்கரைக்குச் சென்று அதை சுத்தம் செய்கிறார். மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்த வலியுறுத்துகிறார்.
டோய் அடிப்படை ஆங்கிலம் பேசுவதாகவும், மக்களுடன் தொடர்பு கொள்ள சைகைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.
இவர் சாலையோரம் இருக்கும் குப்பைகளை அகற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கவனத்தைப் பெற்றார் டோய்.
இதனை தொடர்ந்து -இந்தியா அசோசியேஷன் அவருக்கு கையுறைகள் மற்றும் குப்பைப் பைகளை வழங்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
"நான் விரும்பிதான் இதை செய்கிறேன், கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க உதவும் தூய்மைப் பணியாளர்களை நிர்வாகம் பணியமர்த்தியிருந்தாலும், நமது சுற்றுச்சூழலைப் பராமரிக்க நான் என் பங்கைச் செய்கிறேன். கடற்கரைக்குச் செல்பவர்கள் வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று டோய் கூறியிருக்கிறார்.
இந்த முயற்சியில் பல ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளும் அவருடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.