பூண்டு ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது சளி, காய்ச்சல், இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. விட்டமின் C, B6, மாங்கனீஸ், செலினியம் போன்ற சத்துக்களை கொண்டிருக்கும் பூண்டு, உடலுக்கு தேவையான ஆக்ஸிடென்ட் தன்மையையும் கொண்டுள்ளது. ஆனால், சீனாவில் இருந்து கடத்தி வரப்படும் சில பூண்டு வகைகள், விஷச்சத்து நிறைந்தவை என்றும், பாதுகாப்பு காரணங்களால் 2014ம் ஆண்டில் இந்தியாவில் தடையிடப்பட்டிருந்த சீன பூண்டு, தற்போது பக்கவாட்டாக மீண்டும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் விளையும் பூண்டு, பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்கவும், புத்துணர்ச்சி நிறைந்ததாக காட்டவும் சில ரசாயன வழிகள் மூலம் செயலாக்கப்படுகின்றன.
சீன பூண்டுகளில் மெத்தில் ப்ரோமைடு (Methyl Bromide) என்ற ஆரம்ப நிலையில் மணமற்ற, நிறமற்ற, ஆனால் மிக அதிக விஷத்தன்மை கொண்ட வாயு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது பூஞ்சை தொற்றுகளை கட்டுப்படுத்தவும், பூண்டின் முளைப்பை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மிகுதி உடலில் சென்றால், மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுதல், நரம்பு மண்டலம் செயலிழத்தல், மூச்சு திணறல், கண்கள் மற்றும் தோலில் பாதிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும், நீண்ட நாட்கள் இதை சுவாசித்தால், கோமா நிலைக்கும் சென்றுவிடலாம். சீன பூண்டுகளை அடையாளம் காண, அவற்றின் பெரிய அளவிலான பற்கள், வெளிர் நீல அல்லது ஊதா வரிகள் கொண்ட தோல் ஆகியவற்றைப் பார்த்து கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற பூண்டுகளை வாங்குவதை தவிர்த்து, உள்நாட்டிலேயே உற்பத்தியாகும், இயற்கையான முறையில் வளர்க்கப்படும் பூண்டுகளை பயன்படுத்துவது நல்லது.