மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸுடன் மெலின்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே சில காரணங்களால் விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தனது வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களை குறித்து மெலிண்டா கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும் போது “விவாகரத்து என்பது மிகவும் வலி தரக்கூடிய ஒன்று, எந்தக் குடும்பத்திற்கும் அது நடக்க வேண்டாம்” என Elle இதழுக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். அதோடு, “நான் சிறப்பாக முன்னேறி வருகிறேன், புதிய வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒருவருக்கு வாழ்க்கையில் முழு சுதந்திரமும், முடிவெடுக்கும் அதிகாரமும் முக்கியம் என வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து விவாகரத்திற்குப் பிறகு தனியாக வாழ்க்கையை தொடரும் அனுபவம் பற்றியும், தனது பணியையும், தனிப்பட்ட முடிவுகளையும் எந்த அனுமதியும் கேட்காமல் எடுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாக மெலின்டா கூறினார்.
பின்னர் “முதல் முறையாக, நான் முழுமையாக சுயமரியாதையோடு இருப்பதாக உணர்கிறேன். என் சொந்த பணத்தை செலவழிக்கிறேன், என் சொந்த முடிவுகளை எடுக்கிறேன். இது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டார். அப்போது அவர் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கியதாகவும், ஸ்கீயிங், கயாக்கிங், நடக்கச் செல்வது, நண்பர்களை சந்திப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்வதன் மூலம் வாழ்க்கையை புதுப்பிக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என தெரிவித்தார்.