புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரிலே சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டமானது இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்திலும் ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வது போல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக நியாயவிலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடிக்கும் மேற்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதற்கான 26,000 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் .மேலும் இதற்காக ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.