கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி, அதே பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் உயிரியல் பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளார்.
அப்போது, தேர்வு அறையில் மேற்பார்வையாளராக இருந்த முதுகலை ஆசிரியர் ரமேஷ் என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தேர்வை சரிவர எழுத முடியாமல் தவித்துள்ளார்.
தேர்வு முடிந்ததும் விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக அவரது பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். தேர்வு அறையில் பள்ளி மாணவிக்கு மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.