சாலையில் படுத்து கொண்ட பக்தர்களை தாண்டி செல்லும் கோவில் மாடுகள்... மலைவாழ் மக்களின் விநோத கோயில் திருவிழா!
Dinamaalai March 22, 2025 01:48 AM

தொழில்நுட்பம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் சில பழக்க வழக்கங்கள் தொன்று தொட்டு இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூத்து மலை சுற்று வட்டாரப் பகுதியில் 7 கிராம மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அருநூத்து மலை பகுதியில் வெள்ளை விநாயகர் கோயில், பெருமாள் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில், மலைகிராம மக்கள் கோவிலுக்கு நேர்ந்து விட்ட 20க்கும் மேற்பட்ட காளை மாடுகளை அலங்கரித்து கோயிலைச் சுற்றி மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

 
கிராம மக்கள் தங்களுடைய வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலைச் சுற்றி உருளை தண்டம் செய்தனர். பின்னர் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஏந்தி கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து திருக்கோடி தீபம் ஏற்றி அலங்கரிக்கப்பட்ட கோயில் காளைகள் அழைத்து வரப்பட்டன.  பக்தர்கள் காளை வரும் சாலையில் படுத்துக் கொண்டனர். 
அப்போது கோயில் காளைகள் பக்தர்களை தாண்டிதாண்டி நடந்து சென்றன.  இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும், பில்லி, சூனியம், பேய் மற்றும் ,நோய் நொடிகள் அண்டாமல் இருக்கும் என இவர்களது முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் அருநூத்துமலை மலை கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளை பிள்ளையார் கோயில் மற்றும் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.