தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டத்தை புறக்கணித்துள்ள மம்தா பானர்ஜி..! காரணம் என்ன?
Seithipunal Tamil March 22, 2025 10:48 AM

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாளை நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு 07 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் சென்னை வந்துள்ளனர். அத்துடன், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நாளை காலை சென்னை வரவுள்ளார். மேலும், பிஜூ ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

அத்துடன், தே.ஜ., கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது என கூறப்படுகிறது. 

அம்மாநிலத்தில் ஒரே மாதிரியான அடையாள அட்டை பிரச்சினை எழுந்துள்ள நிலையில், இது குறித்து மம்தா பானர்ஜி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்து வருகிறது. 

குறித்த பிரச்னை பீஹார், கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என மம்தா கருதுகிறார். இதனால், தற்போதைய நிலையில், இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்து உள்ளதாகவும், இதனால் சென்னையில் நாளை நடக்கும் கூட்டத்தில் அவரது கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

இந்நிலையில்,  இந்தாண்டு பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.