அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கோட்டையனிடமே என்ன பிரச்சனை என்று கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக சொன்னார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். சட்டசபையில் கூட அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தன் தொகுதியில் உள்ள பிரச்சனை தொடர்பாகத்தான் சபாநாயகரையும் அந்த தொகுதியின் அமைச்சரையும் சந்திப்பதற்காக அங்கு சென்றதாக செங்கோட்டையன் விளக்கம் கொடுத்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டையன் தேர்தல் நெருங்கி வருவதால் நான் பேச முடியாத சூழலில் இருக்கிறேன் என்றார். அதோடு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை சொல்லி அவர்களுக்கு புகழாரம் சூட்டும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரைக் கூட சொல்ல தயங்குகிறார். இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு சென்றார். அவர் அங்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு விசிட் அடித்துள்ளார். அவர் திடீர் பயணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறி வருகிறார். இதன் காரணமாக செங்கோட்டையனை வைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமித்ஷா பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று உறுதிப்படுத்திய நிலையில் பேச்சுவார்த்தை கூட நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் இதற்கிடையில் செங்கோட்டையனின் திடீர் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது போன்றவைகளும் அதிமுக தலைமைக்கு செங்கோட்டையனை கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.