கராச்சியின் அராம் அஹ்சான் அலி, இளம் பாகிஸ்தானியர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 'கனவு வேலைகளை' பெற உதவுகிறார்.
நான்கு ஆண்டுகளாக ப்யோடேட்டா, கவர் லெட்டர் மற்றும் லிங்க்ட்இன் சேவைகளை வழங்கி வரும் அராம், நல்ல கல்வி மற்றும் அனுபவம் இருந்தபோதிலும் பெரும்பாலான விண்ணப்பதாரர்களால் தங்களது சிவி-யை (CV) நவீன தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று கருதுகிறார்.
"ஒரு ஆள்சேர்ப்பு செய்பவருக்கு அதற்கு விண்ணப்பித்தவர் அளித்த சுயவிவரக் குறிப்புகளை பார்க்க 7 வினாடிகள் மட்டுமே இருக்கும். விண்ணப்பதார்களிடம் திறமை இருந்தபோதிலும் ஈர்க்கக்கூடிய curriculam vitae இல்லாததால் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
70 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் அவை எவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்படாத தனது வாடிக்கையாளர் ஹம்சாவின் உதாரணத்தை அராம் மேற்கோள் காட்டுகிறார்.
'வேலை கிடைக்கவில்லை'இந்த பிரச்னை ஹம்சாவுக்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு வேலை விளம்பரத்திலும் ஒரு நிறுவனம் சில சிறப்பு குணங்களைக் கேட்கிறது, அதை உணராமலேயே நம்மில் பலர் பல வருடங்கள் பழமையான சுயவிவரக் குறிப்புகளை பல நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இப்போது ஏடிஎஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருள் மூலம் ஆட்களை தேர்வு செய்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகிவரும் ’சிவி’ (Curriculam Vitae) எழுதும் துறையில் அராம் இப்போது ஈடுபட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, நீங்கள் லிங்க்ட்இன், இன்ஸ்டாகிராம் அல்லது டிக்டோக்கைப் பார்த்தால், 'உங்கள் சிவியில் இந்த விஷயங்களை ஒருபோதும் போடாதீர்கள்’ என்று பலர் சொல்வதை நீங்கள் காண்பீர்கள்.
சிவியை உருவாக்கும் போது என்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்குக் கற்பிப்பதே தன் நோக்கம் என்று அராம் கூறுகிறார். இதனால் நிறுவனங்கள் உங்கள் சுயவிவரத்தால் ஈர்க்கப்பட்டு வாய்ப்பளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் இப்போது பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்துகின்றன.
விண்ணப்பதாரர் கண்காணிப்பு அமைப்புகள் (ATS) எனப்படும் இந்த மென்பொருள், விண்ணப்பதாரர்களின் சிவிகளை வடிகட்டுகிறது. பல கட்டங்களுக்கு பிறகு ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்படக் கூடிய பட்டியலில் சேர்க்கப்படுவாரா அல்லது அவருக்கு நிராகரிப்பு மின்னஞ்சல் அனுப்பப்படுமா என்பதை இந்த மென்பொருள் தீர்மானிக்கிறது.
ஒரு நல்ல வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு கூடவே தங்கள் சிவியையும் பதிவேற்ற வேண்டும்.
தினசரி நூற்றுக்கணக்கான சிவிக்களை பெறும் மேலாளர்களின் பணிச்சுமையை இந்த மென்பொருள்கள் குறைக்கின்றன.
அடிப்படை மட்டத்தில் இந்த மென்பொருள் ஒரு விண்ணப்பதாரரை அவருடைய கல்வி, அனுபவம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது. ஒரு வேலைக்கு அவசியமான வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அது சிவியில் தேடுகிறது.
இந்த மேம்பட்ட மென்பொருட்கள் சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அல்காரிதம்களை பயன்படுத்துகின்றன. சிவிக்களை ஸ்கேன் செய்து ஒரு விண்ணப்பதாரர் மற்றவர்களை விட மேம்பட்டவரா என்பதை தீர்மானிக்கின்றன.
தினசரி அடிப்படையில் நூற்றுக்கணக்கான சிவிக்களை பெறும் மேலாளரை பொருத்தவரையில் இந்த ஏடிஎஸ் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஃபஹத் அகமது தற்போது ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். உலகம் முழுவதிலுமிருந்து ஐ.டி திறமையாளர்களைக் கண்டுபிடிப்பதே அவரது முக்கிய குறிக்கோள். ஏடிஎஸ் மூலம் ஹெச்ஆரின் (மனித வளம்) திறன் மேம்படுகிறது என்று பிபிசி உருதுவிடம் அவர் கூறினார்.
நிறுவனங்களின் மனிதவளத்துறை (HR) தனது தரவுத்தளத்தை இந்த மென்பொருள்களில் சேமிக்கிறது என்பதை விண்ணப்பம் செய்பவர்கள் புரிந்துகொள்வது அவசியம் என்று அவர் சொன்னார். பலர் சேல்ஸ் வேலைக்கு விண்ணப்பித்தால், இந்த தரவு முழுவதும் ஏடிஎஸ்-க்கு செல்கிறது. அங்கு ஹெச்.ஆர். இந்த சிவிக்களை மதிப்பாய்வு செய்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஏடிஎஸ் இந்தத் தரவை வடிகட்டி இந்த செயல்முறையை எளிதாக்குகிறது.
ஏடிஎஸ் செயற்கை நுண்ணறிவு மூலம் 'திறன் பொருத்தம்' அல்லது 'சொல் பொருத்தம்' செய்கிறது என்று அவர் விளக்குகிறார். அதாவது குறிப்பிட்ட வேலை மற்றும் சிவியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது எந்த விண்ணப்பதாரர் வேலைக்கு பொருத்தமானவர் என்பது தெளிவாகிறது.
ஆனால் ஆரம்ப கட்டத்தில் ஆயிரக்கணக்கான சிவிக்களில் இருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து ஏடிஎஸ் பட்டியலிடுகிறது என்பது தெளிவாகிறது.
ஒரு விண்ணப்பதாரரின் சுயவிவரம் இந்தத் தேவைகளுடன் பொருந்தவில்லை என்றால் ஆரம்பத்திலேயே அது நிராகரிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் செய்யும் தவறுகளால் அவர்கள் விரும்பும் வேலை கிடைப்பதில்லை.
24 ஆண்டுகளாக கல்வித் துறையில் இருக்கும் ஆபிதா நசீரப் கடந்த பல ஆண்டுகளாக Fiverr(ஆன்லைனில் சிவி தயாரித்து வழங்கும் அமைப்பு) இல் ஒரு ஃப்ரீலான்ஸராக பணிபுரிகிறார். வேலை தேடுபவர்களின் சிவிக்களை மேம்படுத்த அவர் உதவுகிறார்.
விண்ணப்பதாரர்கள் சிவியில் தங்களின் பெரிய புகைப்படத்தைச் சேர்ப்பது அல்லது தொடர்புப் பகுதியில் தங்கள் வீட்டு முகவரியை எழுதுவது போன்ற தவறுகளை அடிக்கடி செய்வார்கள் என்று அவர் விளக்குகிறார். சில விண்ணப்பதாரர்கள் பொழுதுபோக்கு அல்லது ஆர்வம் என்ற பெயரில் தேவையற்ற தகவல்களை வழங்குகிறார்கள்.
பல விண்ணப்பதாரர்கள் வடிவமைப்பு மற்றும் எழுத்துருவில் (Font) அடிப்படை தவறுகளை செய்கிறார்கள். சில நேரங்களில் எந்த மென்பொருளாலும் அதை படிக்க முடிவதில்லை என்று ஆபிதா கூறுகிறார்.
”முதலில் தங்களின் தற்போதைய வேலையைப் பற்றி சொல்ல வேண்டும், பின்னர் பழைய வேலையைக் குறிப்பிட வேண்டும் என்று கூட சில விண்ணப்பதாரர்களுக்கு தெரிவதில்லை,” என்றார் அவர்.
உங்கள் சிவியில் ஒரு பெரிய புகைப்படம் அல்லது செல்ஃபியை சேர்த்தால் தொழில்முறையாக நாட்டம் இல்லாதவர் என்ற முடிவு எட்டப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். மென்பொருள் அல்லது ஹெச்ஆர் மூலம் இவை ஒருபோதும் தேர்வு பட்டியலில் வராது.
இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு ஹெச்ஆரிடமும் உங்கள் சிவியை பார்க்க சில விநாடிகள் மட்டுமே உள்ளது.
விண்ணப்பதாரர்களின் சிவிக்களில் பல குளறுபடிகளையும் ஃபஹத் அகமது சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதை சரிசெய்யது சாத்தியம் என்கிறார் அவர்.
விண்ணப்பதாரர்கள் வேலை விளம்பரத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அடையாளம் கண்டு அவற்றை தங்கள் சிவியில் சேர்க்க வேண்டும் என்று ஃபஹத் குறிப்பிட்டார்.
உங்கள் சிவியில் அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் குறிப்பிட நீங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது ஒரு ஹெச்ஆர் ஈர்க்கப்படுகிறார். இது ஒரு விண்ணப்பதாரரின் தொழில்முறை நாட்டம் மற்றும் தீவிரத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் சிவிக்களை உருவாக்குவது இப்போது எளிதாகிவிட்டாலும், விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் அனுபவத்துடன் தொடர்புடையவற்றை மட்டுமே ஒருவர் தங்கள் சுயவிவரத்தில் சேர்க்க வேண்டும் என்று ஃபஹத் வலியுறுத்துகிறார். "நேர்காணலில் தெரியவராத ஒன்றாக இருந்தாலும் உங்களுடைய தனிப்பட்ட திறமையை நீங்கள் அதில் சேர்க்கலாம்,” என்று அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக பாகிஸ்தானில் இருந்து திறமைகளைத் தேடும் ஃபஹத், கல்வி மற்றும் அனுபவம் இருந்தபோதிலும் பல விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றும் இது முக்கியமாக தகவல் தொடர்பு தொடர்பானது என்றும் கூறுகிறார்.
"நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவராக இருக்கலாம். ஆனால் பேச்சுத்திறமை முக்கியமானது," என்று அவர் கூறுகிறார். ”உங்களால் சரியான முறையில் பேசி புரியவைக்க முடியாவிட்டால், உலக அளவில் உங்களால் போட்டியிட முடியும் என்று நான் கருதவில்லை,” என்றார் அவர்.
பாகிஸ்தானிய இளைஞர்களிடம் திறமையும் திறனும் உள்ளது. ஆனால் அவர்கள் பேச்சுத்திறமை மற்றும் தொழில்முறை அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்று ஃபஹத் குறிப்பிட்டார்.
நீங்கள் உங்கள் கல்வியைப் பற்றி 50 சதவிகிதத்துக்கு மேல் எழுதக்கூடாது என்று ஆபிதா கூறுகிறார். பட்டப்படிப்புக்கு முந்தைய கல்வி பற்றி எழுத வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயினும், தங்களை வேறுபடுத்திக் காட்டும் தங்கள் தொழில்முறைப் பயணத்தின் சாதனைகளை ஒருவர் குறிப்பிட வேண்டும் என்று அராம் அஹ்சான் அலி பரிந்துரைக்கிறார்.
ஒரு நல்ல நிறுவனத்தின் வேலை விளம்பரத்துக்காக ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் சிவிக்களை அனுப்புவார்கள் என்பதை விண்ணப்பதாரர்கள் மனதில் கொள்ளவேண்டும்.
ஒரு நிறுவனத்துக்கு ஒவ்வொரு சிவியையும் பார்ப்பது சாத்தியம் அல்ல. எனவே வேலையை எளிதாக்க இந்த மென்பொருள்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
'ஏடிஎஸ் ஃப்ரெண்ட்லி' சிவியில் நீங்கள் எளிமையான வடிவமைப்பு, எழுத்துருக்கள் மற்றும் ஃபார்மேட்டை பயன்படுத்துங்கள். படங்கள், அட்டவணைகள் அல்லது வரைபடங்கள் எதையும் சேர்க்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரத்தில் சிறிய பகுதிகளை உருவாக்கி அதில் தொடர்புடைய தகவல்களை மட்டும் எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
"நீங்கள் வேலை விளம்பரத்தை நன்கு படிக்க வேண்டும். அதிலிருந்து சில முக்கிய வார்த்தைகளை உங்கள் சிவியில் சேர்க்க வேண்டும். இதனால் மென்பொருளுக்கு அதை ஷார்ட்லிஸ்ட் செய்வது எளிதாகிறது" என்று அபிதா கூறுகிறார்.
உங்களுக்கு ஐந்து வருட அனுபவம் இருந்தால், அதன் தேவை வேலை விளம்பரத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தால் அதை நீங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இந்த அடிப்படையில் உங்கள் ஸ்கோர் குறைக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
அதாவது, உங்கள் சிவியை வேலை விளம்பரத்துக்கு ஏற்ப மாற்றினால் அது ஏடிஎஸ்ஸுக்கு ஏற்றதாக மாறி நீங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கும்.
சிவி நீளமாக இருந்தால், அது 'சிறந்த தாக்கத்தை' ஏற்படுத்தும் என்ற ஒரு தவறான கருத்து உள்ளது என்கிறார் ஆபிதா.
"சிக்கலான டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட சிவி, ஏடிஎஸ்ஸுக்கு ஏற்புடையதாக இருக்காது. ஏனெனில், பொதுவாக ஏடிஎஸ் மென்பொருளால் மிகவும் எளிமையான சிவிக்களை எளிதாகப் படிக்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.
மறுபுறம், விண்ணப்பதாரர்கள் தங்கள் சிவியில் எளிய வடிவமைப்பை பயன்படுத்த வேண்டும் என்று ஃபஹத் பரிந்துரைக்கிறார். அதை 'கலர்ஃபுல்' ஆக்காதீர்கள். எளிதில் புரிந்துகொள்ள முடியும் விதமாக அதை கட்டமையுங்கள். கணினி புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான எழுத்துருவைப் பயன்படுத்துங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
"அதிகப்படியாக அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளை ஏடிஎஸ்ஸால் புரிந்துகொள்ள முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு