ஆசிட் டேங்கர் லாரியை சுத்தப்படுத்தும் பணியில் இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
Dinamaalai March 30, 2025 11:48 PM

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம், சித்தோட்டை  கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டில் வசித்து வருபவர் 45 வயது முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்  . இவருக்கு சொந்தமான சர்வீஸ் ஸ்டேஷனில் சாயக்கழிவு நீரை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணி இன்று  நடைபெற்றது. 


சித்தோட்டை அடுத்த பெருமாள் மலை, ஆர் என். புதூரைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்லப்பன் 52 வயது என்பவர் லாரி டேங்கருக்குள் முகத்தில் துணி கட்டிக்கொண்டு இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆசிட் வீரியம் தாங்காமல் கண் எரிச்சல் ஏற்பட்டதோடு, மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.  இதைக் கண்ட யுவானந்த வேல் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும்  கிருஷ்ணன் மகன் சந்திரன் டேங்கருக்குள் இறங்கி செல்லப்பனை மீட்டு வெளியே அனுப்பினர்.

இதனிடையே, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், டேங்கருக்குள் இறங்கிய மேற்கண்ட இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு டேங்கருக்குள் மயங்கி விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் விரைந்த தீயணைப்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் டேங்கருக்குள் இறங்கி அங்கே மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  
இதையடுத்து இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மற்றொரு தொழிலாளி செல்லப்பன், பவானி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.