அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் போர்ட் ஆர்ச்சர்ட் நகரத்தில், முன்னாள் காதலியின் வீட்டில் புகுந்து அவர் செல்லமாக வளர்த்து வந்த சேவலை ஒருவர் திருடி விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான அந்த நபர் மார்ச் 31ம் தேதி, முன்னாள் காதலியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, ‘பாலி எனக்கு கிடைத்துவிட்டது’ என அலறிக்கொண்டே காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதும், அதிகாரிகள் விரைந்து வந்து அந்த நபரை தேட ஆரம்பித்தனர். உடனே நடத்தப்பட்ட விசாரணையில், காட்டில் அடர்ந்த புதர்களுக்குள் பதுங்கி இருந்த அவரை போலீசார் துப்பாக்கியுடன் அணுகியுள்ளனர்.
அப்போது அவர், “என் சேவலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படுத்தாதீர்கள்!” என பரிதாபமாக கூக்குரலிடுகிறார். இதையடுத்து போலீசார் அவருக்கு உறுதியளித்ததும், அவர் ஒத்துழைத்து கைது செய்யப்பட்டார். இந்த விசாரணையில் அவர், சிறையில் இருந்து வெளிவந்த 3 மணி நேரத்திற்குள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. முன்னாள் காதலி கூறுகையில், “அவர் சிறையில் இருந்தார். அன்று தான் வெளியே வந்தார்.
என்னுடைய செல்ல சேவலான பாலியை தூக்கிச் செல்லவே இவ்வாறு செய்தார்” எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் மீது அதிகபட்சமாக 10 வருடம் சிறைவாசம் மற்றும் 20,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.