அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் ஸ்காட்ஸ்டெயில் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி வீட்டில் விடுமுறை கழித்து வந்த ஆற்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் எலியட் மற்றும் நான்சி யங், தங்கிய முதல் நாளிலேயே மறைமுகமாக பொருத்தப்பட்ட கேமரா ஒன்றை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் தங்கிய முதன்மை அறையில் “smoke detector” என நினைக்கப்பட்ட சாதனம் உண்மையில் வைஃபை மூலம் இயக்கக்கூடிய நைட் விஷன் கேமரா என அடையாளம் காணப்பட்டது.
அதில் 2020 முதல் பல்வேறு வாடிக்கையாளர்களின் ரகசிய வீடியோக்கள் உள்ளன என்பதையும், அதை நேரலையாக ஸ்ட்ரீம் செய்யும் சாதனங்களும் வீட்டில் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நான்சி உடனடியாக ஏர்பிஎன்பி வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொண்டார். மேலும் தம்பதியர் ஸ்காட்ஸ்டெயில் காவல்துறையிலும் புகார் அளித்தனர். இது போன்ற மறைமுகக் கண்காணிப்பு சாதனங்களைப் பயன்படுத்திய பல்வேறு சம்பவங்கள் உலகம் முழுவதும் ஏர்பிஎன்பி வீடுகளில் முன்னர் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், யங் தம்பதியர் $2,800 செலவில் அந்த வீட்டை 5 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்ததாகவும், ரகசிய கேமரா அவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறியதோடு, விடுமுறையின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடிலிருந்து வெளியேறி வேறு இடம் தேடியதற்காக மேலும் பணம் செலவழிக்க நேரிட்டதாகவும், பொருளாதார இழப்புகள், மன உளைச்சல், பயம் மற்றும் அவமானத்திற்கு இழுத்ததற்காக நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.