மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை ராய்கட் மாவட்டத்தில் ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் உர்மிலா. 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்தார். பேரன் வேதாந்த விவேகிற்கு 1 வயதாகும் நிலையில் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு நேற்று மும்பையில் சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணிக்கு குழந்தையின் தாய் குளியலறைக்கு சென்றார். அப்போது உர்மிலா தன் பேரனை தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்ற நிலையில் அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பேரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சில மணி நேரங்களில் பேரனும் உயிரிழந்து விட்டான். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உர்மிலா; கடந்த 4 வருடங்களாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், சரியான மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், பேரனுக்கு ஏற்பட்ட நோயால் மனமுடைந்த அவர் இந்த தற்கொலை முயற்சியை செய்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது அவரின் 2 வது தற்கொலை முயற்சி எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.