மகாராஷ்டிரா மாநிலம் நாண்டேட் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா பல்கலைக்கழகம், எஸ்ஜிஜிஎஸ் கல்லூரி மற்றும் ஒரு நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த 31 மாணவர்கள் ஒரே இடத்தில் பானிபுரி சாப்பிட்டதையடுத்து வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் காரணமாக, வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் டாக்டர் சங்கர்ராவ் சாவண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒத்துழைத்து நலம் பெறுகிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் ஒரே சாலையோர கடையில் பானிபுரி சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. அந்த உணவுக் கடை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து சாலையோரத்தில் அனுமதியின்றி இயங்கும் கடைகளில் உணவு உண்பதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.