ஆந்திராவில் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் அமீன்பூரில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. 30 வயதாகும் இவருக்கு 50 வயதில் சென்னையா என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்கிருஷ்ணா(12), மதுபிரியா(10), கெளதம்(8) என 3 குழந்தைகள் இருக்கின்றன.
திருமணம் முதலே 20 வயது வித்தியாசமுள்ள நபரை திருமணம் செய்து கொண்டதால் ரஞ்சிதா அதிருப்தியில் இருந்தார். ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் ரஞ்சிதாவுடன் பள்ளியில் படித்தவர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர். இதில் ரஞ்சிதாவிற்கு அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சிவாவுடன் மீண்டும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகத்தை தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டனர். இது நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய தொடர்பை உருவாக்கிவிட்டது.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். சில நாட்களில் ரஞ்சிதா சிவாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவன் இருப்பதால் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். அவர்களின் தொல்லை இல்லை என்றால் உன்னை திருமணம் செய்வது குறித்து பரிசீலிப்பேன் எனவும் சிவா கூறியதாக தெரிகிறது. இதனால் சிவாவை திருமணம் செய்ய தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட ரஞ்சிதா திட்டமிட்டார். அதன்படி மார்ச் 27ம் தேதி சென்னையா இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அதனை பயன்படுத்தி 3 குழந்தைகளையும் கொலை செய்ய ரஞ்சிதா திட்டமிட்டார் இதையடுத்து ரஞ்சிதா முதலில் தனது மூத்த மகன் சாய் கிருஷ்ணாவை டவலால் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்தார்.
அதனை தொடர்ந்து அதே முறையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மூச்சுத்திணறடித்து கொலை செய்தார். காலையில் வேலைக்கு சென்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்டதால் மயங்கிவிட்டதாக தெரிவித்தார். அத்துடன் தனக்கும் வயிறு சரியில்லை என அழுதுகொண்டே கூறினார். பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு 4 பேரையும் சென்னையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் 3 குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர். குழந்தைகளின் உடம்பில் எந்தவித விஷமும் கலந்திருக்கவில்லை. காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரஞ்சிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரது முரணான பதில் ரஞ்சிதாவின் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள், ''குழந்தைகளை பிரேத பரிசோதனை செய்ததில் உணவில் விஷம் கலந்திருந்ததாக தெரியவில்லை. இதையடுத்து ரஞ்சிதாவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது காதலனை திருமணம் செய்ய குழந்தைகள் தடையாக இருப்பதாக கருதி அவர்களை கொன்றதாக தெரிவித்துள்ளார்.இக்கொலை குறித்து சிவாவிற்கும் தெரிந்திருக்கிறது. எனவே இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.