பண்டிகை நாளில் பானிபூரி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
Dinamaalai April 04, 2025 02:48 AM

 

ரமலான் பண்டிகை மார்ச் 31ம் தேதி உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் வங்கதேசத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் நடைபெற்ற திருவிழாவில் பானிபூரி சாப்பிட்ட, 100-க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நலக்கேடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களும் உள்ளனர். அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர அறிகுறிகளால் கடுமையாக அவதிப்பட்டனர். 

பாதிக்கப்பட்ட 95 பேர் ஜெஸ்ஸூரிலுள்ள அபய்நகர் உபசில்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் சுமார் 10 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதால், குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை மருத்துவர் இது குறித்து “பானிபூரியில் இருந்த பாக்டீரியாக்கள் காரணமாக இந்த தொற்றுவாதம் ஏற்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் சாலையோர உணவுகளின் மீது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பானிபூரி விற்பனையாளரை தேடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.