இந்தியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானி வசிக்கும் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடிகள் கொண்ட அந்த மாளிகை மீண்டும் சட்ட மற்றும் அரசியல் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. இதற்கு காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட “வக்பு (திருத்தச் சட்ட) மசோதா 2025” ஆகும். இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்க்கும் நிலையில், அந்த கட்டிடம் வக்பு நிலத்தில் கட்டப்பட்டது என்ற பழைய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
வக்பு நிலம் என்று கூறும் பழைய புகாருகள் மற்றும் அரசியல் எதிரொலிகள் முகேஷ் அம்பானி வீடு கட்டப்பட்டது என கூறப்படும் 4,532 சதுர மீட்டர் நிலம் முறையாக விற்கப்படவில்லை என வக்பு வாரியம் ஒரு புகாரில் கூறியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானி இந்த நிலத்தை ரூ.21.5 கோடிக்கு வாங்கினார். ஆனால், இந்த நிலம் 1986-ஆம் ஆண்டு கரீம் பாய் இப்ராகிம் என்பவரால் வக்ஃப் வாரியத்திற்கு விற்கப்பட்டது எனவும், அனாதை இல்லம் மற்றும் மதப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று AIMIM தலைவர் அசதுதீன் ஒவைசி மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்த நிலம் வக்பு வாரியத்தின் சொத்து என பழைய வீடியோக்களில் கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வக்புநிலங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள் இந்தியாவில் புதிதல்ல. 1950-ல் வக்பு வாரியத்திடம் 52,000 ஏக்கர் நிலம் இருந்தது. 2025-ல் அது 9.4 லட்சம் ஏக்கராக அதிகரித்திருக்கிறது. புதிய வக்பு திருத்த சட்டம் நிலங்களின் பதிவு, பராமரிப்பு மற்றும் பயன்பாட்டை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீரமைக்கும் நோக்கத்துடன் வரவேற்கப்படுகிறது. ஆனால், முகேஷ் அம்பானி வீடு தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வக்பு வாரியம் மற்றும் கரீம் பாய் அறக்கட்டளை அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்ற ஆலோசனையும் வலுத்து வருகிறது.