உத்திரப்பிரதேஷத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள குதாய் மற்றும் பெலடால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையில், ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு நடந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தில், 28 வயது இளைஞர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மகாகோஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த அந்த இளைஞர், பொதுப் பிரிவிற்கான டிக்கெட் வைத்திருந்தபோதும், ஸ்லீப்பர் பெட்டியில் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் GRP போலீசார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது போலீசார் அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், பயணிகள் குற்றம்சாட்டப்பட்ட GRP போலீசாரை முறையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெலடால் ரெயில்வே நிலையத்தில் ரெயில் வந்ததும் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ரெயில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பயணிகள் கடுமையாக கேள்வி எழுப்பியதன் பின்னர், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் போலீஸ்காரர் அங்கிருந்து தப்பி ஓடினார். அதேபோல் சம்பவத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் டிக்கெட் பரிசோதகரும் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரத்தில், GRP இன்சார்ஜ் ரன்விஜய் பஹாதூர் சிங், இது குறித்து வேறுபட்ட பதிலை அளித்துள்ளார்.
அந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தெரிகிறார் என்றும், ரெயிலின் திறந்த கதவில் உட்கார்ந்திருந்தார் என்றும் அவர் கூறினார். பாதுகாப்புக்காக கதவை மூடும்போது அந்த இளைஞர் திடீரென கீழே குதித்துவிட்டதாகவும், அவரிடம் டிக்கெட் இல்லையெனவும் கூறியுள்ளார். இந்நிலையில், போலீசார் தற்போது சாட்சிகளை விசாரித்து சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை திரட்டிவருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.