மும்பை தாக்குதல்: கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம் - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார் ரானா
Vikatan April 09, 2025 08:48 PM

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக படகில் வந்து தாக்குதல் நடத்தினர். 3 நாட்கள் நடந்த இத்தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மும்பை உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 175 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகள் படகில் வந்து தாஜ் ஹோட்டல், சி.எஸ்.டி.ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களை குறித்து வைத்து இத்தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு தூக்கிலிடப்பட்டான். இத்தாக்குதலுக்கு திட்டமிட்ட பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கின்றனர். இத்தாக்குதலுக்கான சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவை சேர்ந்த பாகிஸ்தானி டேவிட் ஹட்லியும், அவனது கூட்டாளி தஹாவ்வூர் ரானாவும் 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க நீதிமன்றம்

இதில் டேவிட் ஹட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ரானாவிற்கு தீவிரவாதத்திற்கு உதவியதாக கூறி அமெரிக்க நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவனது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து கொரோனாவிற்கு பிறகு ரானா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். ஆனால் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்பதற்காக ரானா மீண்டும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து பேசியபோது ரானாவை இந்தியாவிற்கு நாடு கடத்த சம்மதம் தெரிவித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து இறுதியாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ரானா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்திருந்தான்.

ஆனால் அந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே ரானாவை இந்தியாவிற்கு நாடு கடத்த தேவையான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. சிறப்பு விமானம் மூலம் ரானா இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தனி விமானம் தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் ரானா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.