நேஷனல் ரீப்யூப்லிக்கன்ஸ் காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், நாம் மருந்து பொருட்களுக்கு மிக விரைவில் ஒரு பெரிய வரியை அறிவிக்கப் போகிறோம். மருந்து நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை அமெரிக்காவுக்கு மாற்ற ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது இந்த நடவடிக்கை.
நாம் அதை செய்தவுடன் அவர்கள் நம் நாட்டுக்கு விரைந்து வருவார்கள், ஏனென்றால் நாம் பெரிய சந்தை. எல்லோரையும் விட நமக்கு இருக்கும் நன்மை என்னவென்றால் நாம் பெரிய சந்தை என்று தெரிவித்தார். விரைவில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அமெரிக்காவுக்கு மருந்து சப்ளை செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
அமெரிக்க சுகாதார அமைப்பில் இந்திய மருந்து நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2022ம் ஆண்டில் அமெரிக்காவில் விற்கப்படும் பத்து மருந்துகளில் நான்கு மருந்துகள் இந்திய நிறுவனங்களின தயாரிப்பாக இருந்தது. அந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க சுகாதார அமைப்பிற்கு 21,900 அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலையில், மருந்து பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்தால், உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும் மற்றும் மற்ற நாடுகளின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது விலை போட்டித்தன்மையை குறைக்கும் (உற்பத்தி செலவினம் அதிகரித்தால் விலையை குறைக்க முடியாது) என்பதால் இந்திய மருந்து உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரப்பரப்பை ஏறபடுத்தியுள்ளது.