நியூ ஷெப்பர்ட் ராக்கெட், 6 பெண்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் இருந்து புறப்பட்டது. 11 நிமிட விண்வெளி பயணத்தை இவர்கள் மேற்கொண்டனர்.
பாடகி கெட்டி பெர்ரியுடன் தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ் மற்றும் சிபிஎஸ் தொலைகாட்சியின் தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றனர்.
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த விண்வெளி பயணத்தை ஏற்பாடு செய்தது.
இந்த விண்வெளி பயணம் 11 நிமிடங்களை உள்ளடக்கியது. இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை கொண்டு சென்றது.
கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்தனர்.
இவர்கள் பயணித்த விண்கலமானது பைலட் தேவையின்றி முழுவதும் தானாக இயங்கக் கூடியது. பயணிக்கும் பெண்கள் குழு இந்த விண்கலத்தை எந்த வகையிலும் இயக்கத் தேவையில்லை.
விண்வெளி பயணம் முடிந்த பின்னர் விண்கலமானது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது.
இதே நேரத்தில் இந்த விண்கலத்திற்காக பயன்படுத்திய ராக்கெட் பூஸ்டர், ஏவுதளத்திலிருந்து 2 மைல்கள் தொலைவில் தானாக தரையிறங்கியது.
இந்த விண்வெளி பயணம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாடகி கெட்டி பெர்ரி "முதன்முதலாக விண்வெளிக்குச் செல்லும் அனைத்து மகளிர் குழுவில் நானும் இருப்பேன் என நீங்கள் கூறினால் அதனை நான் நம்பியிருப்பேன்.ஒரு குழந்தையாக எதுவுமே எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது கிடையாது." என்று கூறியுள்ளார்.
கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
"இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது.
கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
"சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
"இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர்.
சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார்.
அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும்.
ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார்.
விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு