வக்பு சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை? என்ன நடந்தது உச்சநீதிமன்றத்தில் ?
A1TamilNews April 18, 2025 02:48 AM

வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராக நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக  காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நேற்று தொடங்கியது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜராயினர். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். 

தலைமை நீதிபதி சஞ்சய் குமார், "சட்டத்தின் சில விதிகள் நிறுத்தி வைக்கப்படாவிட்டால், களத்தில் நிலைமை மாறக் கூடும். பொதுவாக, ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பது அரிது. ஆனால், நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறினார். அதற்கு, அடுத்த விசாரணை தேதி வரை வக்பு (திருத்தம்) சட்டம், 2025-இன் பிரிவு 9 மற்றும் 14-இன் கீழ் மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களுக்கு எந்த நியமனங்களும் செய்யப்படாது என சொலிசிட்டர் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.

அவரது உத்தரவாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், அதனை தனது இடைக்கால உத்தரவாக பதிவு செய்தது. மேலும், பயனர் சொத்துகளின் வக்பு சொத்துக்கள் அனைத்தும் அடுத்த விசாரணை தேதி வரை ரத்து செய்யப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை மே 5-ஆம் தேதிக்கு  உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.