பல ஆண்டுகளாக ஹஜ் செல்ல விரும்பிய வழக்கறிஞர் ஃபிரோஸ் அன்சாரி, இந்த ஆண்டு தனது மனைவியுடன் ஹஜ் செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இதற்காக, ஃபிரோஸ் அன்சாரி ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்திடம் 8 லட்ச ரூபாயை கட்டினார். ஆனால் தற்போது அவரது ஹஜ் பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவின் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஹஜ் ஒதுக்கீட்டை, செளதி அரேபியா இந்த ஆண்டு ரத்து செய்தது.
ஆனால், இந்த விஷயத்தில் இந்திய அரசு தலையிட்ட பிறகு, தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பத்தாயிரம் பேருக்கு விசா வழங்க செளதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த முகமது நிசார், தனது மனைவியுடன் ஹஜ் செல்லத் தயாராகி வருகிறார். அவரும் ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் சுமார் ரூ.8 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் இருக்கிறார்.
இந்தியர்கள் இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயணத்துக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் சுமார் 1.22 லட்சம் பேருக்கான அனுமதி ஹஜ் கமிட்டிக்கு, மீதமுள்ள நபர்களுக்கான (சுமார் 52,500 பேர்) அனுமதி தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களின் ஒதுக்கீட்டை செளதி அரேபிய அரசாங்கம் ரத்து செய்து, பின்னர் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் இதற்கு தனியார் நிறுவனங்களையே பொறுப்பாக்கியுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களோ, ''அமைச்சகத்தின் அலட்சியம்தான்" இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றன.
ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் ஹஜ் பயணிகளை இது பாதிக்காது.
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டதற்கு பிறகு, செளதி அரேபியா பத்தாயிரம் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இது நிச்சயமாக ஹஜ் செல்லும் மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி அளிக்கும்" என்கிறார் டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவர் கௌசர் ஜஹான்.
ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஓரளவு செலவு குறையும். டெல்லி ஹஜ் கமிட்டியின் கூற்றுப்படி, ஹஜ் பயணம் மேற்கொள்பவருக்கு தோராயமாக ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவாகும்.
ஹஜ் பயணத்தின் போது இந்த பயணிகள் தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டி கவனித்துக் கொள்கிறது.
தனியார் நிறுவனங்கள் மூலம் செல்லும் பயணிகள் இதைவிட அதிகமாக செலவு செய்கிறார்கள். ஆனால் சில சிறந்த வசதிகளையும் பெறுகிறார்கள்.
தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள், வழக்கமாக ரூ.8 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும். சிறந்த வசதிகள் கிடைத்தால் இந்த செலவு ரூ.13-15 லட்சத்தை எட்டும்.
ஒதுக்கீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?அரசு தரவுகளின்படி 2024-ம் ஆண்டு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொண்டனர்.
ஒரு நாட்டின் மக்கள் தொகையைப் பொறுத்து ஹஜ் யாத்திரைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை செளதி அரேபியா தீர்மானிக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு ஆயிரம் இஸ்லாமியர்களுக்கு ஒரு இடம் என ஹஜ் பயணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு ஹஜ் பயணத்துக்கு அதிக ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
செளதி அரேபியா ஹஜ் யாத்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறது, ஆனால் அந்நாட்டில் தற்போதுள்ள வசதிகள் 20-30 லட்சம் பேருக்கு மட்டுமே போதுமானவையாக உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில், ஹஜ் செல்ல விரும்பும் ஏராளமான மக்களால், அங்கு செல்ல முடியாமல் போகிறது.
ஜனவரி 2025 இல், இந்திய அரசு செளதி அரேபியா அரசாங்கத்துடன் ஹஜ் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 நபர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இந்தியாவுக்கு ஒதுக்கீடு கிடைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 18 லட்சம் முதல் 25 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். 2024 ஆம் ஆண்டில், 18.30 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர், அவர்களில் 16.1 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த ஆண்டும் ஹஜ் கமிட்டிக்கும், ஹஜ் சுற்றுலா அமைப்பாளர்களுக்கும் (HGO) இடையில் 70:30 என்ற விகிதத்தில் ஹஜ் பயண ஒதுக்கீடு பிரிக்கப்படும் என்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தார்.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தி, இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
"இந்த முடிவு, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா அமைப்பாளர்கள் மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என முஃப்தி ஏப்ரல் 13 அன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம், செளதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
"52 ஆயிரம் இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே பணம் செலுத்தியுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கிறது" என்று ஒமர் அப்துல்லா கூறினார்.
அரசு கூறுவது என்ன?ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் சுற்றுலா நிறுவனங்களை பொறுப்பாக்கியுள்ளது.
"சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டுக்கான பிரதான ஒதுக்கீட்டின் கீழ் 1,22,518 ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது" என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், "மீதமுள்ள ஒதுக்கீடு, தனியார் சுற்றுலா அமைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது," என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"செளதி அரேபியாவின் வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் 800 தனியார் நிறுவனங்களை, 26 ஒருங்கிணைந்த ஹஜ் குழு நிறுவனங்களாக (CHGO) இணைத்து, அவற்றுக்கான ஒதுக்கீடுகளை முன்கூட்டியே ஒதுக்கியது."
"இருப்பினும், பலமுறை இதுகுறித்து நினைவூட்டப்பட்ட போதும், ஒருங்கிணைந்த ஹஜ் குழு நிறுவனங்கள் (CHGO) செளதி அரேபியா நிர்ணயித்த முக்கிய காலக்கெடுவை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது மற்றும் மினாவில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கான ஒப்பந்தங்களை நிறைவேற்ற தவறிவிட்டது."
அதாவது சரியான நேரத்தில் பணம் செலுத்தாததால், செளதி அரசு தனியார் நிறுவனங்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
"இந்திய அரசு செளதி அரசாங்கத்துடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியது. அரசாங்க தலையீட்டின் காரணமாக, தனியார் நிறுவனங்களின் கீழ் பத்தாயிரம் பேருக்கு அனுமதி வழங்க, செளதி ஒப்புக்கொண்டுள்ளது. மினாவில் தற்போது கிடைக்கும் தங்குமிடம் மற்றும் பிற வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என செவ்வாயன்று, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதே நேரத்தில், பணம் தங்களால் உரிய நேரத்தில் செலுத்தப்பட்டது என்றும், ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமே காரணம் என்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் நவம்பர் 29 அன்று தகுதியான சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பட்டியலை வெளியிட்டது. மேலும் ஹஜ் பயணத்துக்கான இரண்டாம் கட்ட பதிவு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது.
அதனையடுத்து டிசம்பர் 19ம் தேதி அன்று, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஹஜ் குழு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதில், மினாவில் ஹஜ் பயணிகள் தங்குவதற்கான பகுதிகளை விரைவில் முன்பதிவு செய்ய செளதி அரசு வலியுறுத்தி வருவதாக தெரிவித்தது. அதே சுற்றறிக்கையில், இந்திய சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்காக இந்திய துணைத் தூதரகம் தங்குமிட பகுதிகளை முன்பதிவு செய்து வருகிறது என அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான கட்டணமாக ஒவ்வொரு ஹஜ் பயணிக்கு தலா 1,000 ரூபாய் ஏற்பாட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாங்களாகவே பணம் செலுத்த விரும்பும் ஒருங்கிணைந்த ஹஜ் குழு அமைப்பாளர்கள் அதற்கான தகவலை வழங்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
சுற்றுலா நிறுவனங்கள் கூறுவது என்ன ?பிபிசியிடம் பேசிய ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளர், "நிறுவனங்கள் அமைச்சகத்தில் பணத்தை டெபாசிட் செய்திருந்தன. மேலும் அமைச்சகம் பணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அவர்கள் நினைத்தார்கள்" என்று கூறினார்.
"இந்த அறிவிப்பில் அமைச்சகம் பணம் செலுத்துகிறது என்பது தெளிவாகிறது, மேலும் செளதி அரேபியா பணம் பெற்றிருந்தால், தங்குமிட பகுதிகள் ஏன் ரத்து செய்யப்பட்டன" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு தங்குமிடம் மெக்காவிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மினாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு பெரிய கூடார நகரமும் கட்டப்பட்டுள்ளது.
ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என மூன்று பகுதிகளாக மினா பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் கட்டண அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
மினாவில் பயணிகளுக்கான பகுதிகளை முன்பதிவு செய்ய, செளதி அரேபியா பிப்ரவரி 14 ஆம் தேதியை கட்டணம் செலுத்தும் கடைசி நாளாக நிர்ணயித்திருந்தது. இந்த காலக்கெடுவை கடந்த பின்னரே ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துமாறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. மேலும், இந்திய ஹஜ் குழு ஏற்கெனவே அவர்கள் சார்பாக முன்பதிவு செய்துவிட்டதாகவும் கூறியது.
மற்றொரு அறிவிப்பில், சரியான நேரத்தில் பணம் செலுத்தாததற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
"ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் முழு திட்டமும் இந்தியாவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்படுகிறது. இது பெரும் நிதி இழப்புகள் மற்றும் பிற வகையான இழப்புகளை ஏற்படுத்துவதால், இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டும்" என்று பயண முகவர்கள் சங்கம் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
"அரசாங்கம் செயல்பட்ட முறையின் குறைபாடுகளே இந்த பிரச்னைக்குக் காரணமாக உள்ளன. எங்களைப் போன்ற சுற்றுலா நிறுவனங்கள், ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஆனால், ஹஜ் யாத்திரை செல்ல பல ஆண்டுகளாகக் காத்திருந்தவர்கள் செல்ல முடியாமல் போவதுதான் பெரிய பிரச்னை" என்று ஜஹான் உம்ரா என்ற சுற்றுலா நிறுவனத்தின் இயக்குநர் ஷாபி அகமது கூறுகிறார்.
"எங்களுக்கு 50 பயணிகளுக்கான ஒதுக்கீடு இருந்தது. இப்போது நாங்கள் 9 பேரை மட்டுமே அனுப்ப முடியும். யாரை அனுப்புவது என்று முடிவு செய்வது கூட கடினமாக இருக்கும்" என்கிறார் ஷபி அகமது.
இப்போது உள்ள வழி என்ன ?ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்கள் டெபாசிட் செய்த பணத்தை அடுத்த ஆண்டு பயன்படுத்தலாம் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் பயணிகளுக்கு இதனால் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
வழக்கறிஞர் ஃபிரோஸ் அன்சாரி, "நாங்கள் பல வருடங்களாக ஹஜ் செல்ல தயாராகி வந்தோம், மிகுந்த சிரமத்துடன் பணத்தை சேமிக்க முடிந்தது. இப்போது இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்போது பணம் கிடைக்கும் என்று தெரியவில்லை" என்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 22 ஆம் தேதி செளதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரதமரின் தலையீட்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று தனியார் சுற்றுலா நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் ஜூன் 4-9 வரை நடைபெறும். இந்திய பயணிகள் வழக்கமாக ஹஜ் பயணத்தின் போது செளதி அரேபியாவில் 30 முதல் 40 நாட்கள் வரை தங்கி பல்வேறு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.